ஒரே எண்ணை பல ஆண்டுகள் வைத்திருந்தால் தனி கட்டணம்! டிராய்(TRAI) கூறியது என்ன?
ஒரே மொபைல் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தால் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று பரவி வந்த தகவல் குறித்து டிராய்(TRAI) தகவல் வெளியிட்டுள்ளது.
தற்பொழுது இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், விஐ என்று மூன்று தொலை தொடர்பு நிறுவனங்கள் சேவைகளை வழங்கி வருகின்றது. பலரும் தங்களுக்கு பிடித்தமான தொலை தொடர்பு நிறுவனங்களில் இருந்து மொபைல் எண் பெற்றுக் கொண்டு நெட்வொர்க் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்பொழுது இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகையில் 120 கோடிக்கும் அதிகமான மக்கள் மொபைல் எண்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இணைய சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதை முறைப்படுத்த தொலை தொடர்பு துறை அமைப்பான ட்ராய்(TRAI) பல்வேறு விதிமுறைகளை விதித்து வருகின்றது.
பொதுவாக செல்போன்களில் பலரும் இரண்டு சிம்களை போட்டுக் கொண்டு அதில் ஒரு சிம்மை மட்டும் அதிகமாக பயன்படுத்துவார்கள். அதே போல சில நிறுவனங்களும் குறிப்பிட்ட ஒரு சில தொலைபேசி இணைப்புகளை மட்டும் பயன்படுத்தி வருகிறார்கள். பல ஆண்டுகளாகவும் ஒரே எண்களை அதிகமாக பயன்படுத்தி வருவார்கள்.
அந்த வகையில் இவ்வாறு அதிகமாக பயன்படுத்தப்படும் செல்போன் எண்களுக்கும், தொலைபேசி எண்களுக்கும் தனியாக கட்டணம் வசூல் செய்யப்படும் என்று சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது. இந்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது பொய்யான தகவல் என்றும் இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை குழுமமான ட்ராய்(TRAI) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ட்ராய்(TRAI) “ஒரு செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக வைத்திருப்பதற்காகவும் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துவதற்காகவும் தொலைபேசி எண்களை வைத்திருப்பதற்காகவோ எந்தவொரு கட்டணமும் வசூல் செய்யப்படமாட்டாது. இது போன்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளது.