இன்று ஏசி,பிரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.காரணம் ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.ஏசி பயன்படுத்தினால் வெப்பத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும் என்றாலும் அதனால் வருகின்ற கரண்ட் பில்லை பார்த்தால் நமக்கு தலை சூடாகிவிடும் என்பது தான் நிதர்சனம்.
மக்களுக்கு கரண்ட் பில் பற்றிய கவலை ஏற்படாமல் இருக்க மத்திய அரசு “பிரதமரின் சூரிய வீடு” என்ற திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தது.இந்த திட்டத்தின் மூலம் வீடுகளின் கூரைகளில் சோலார் பேனல்களை பொருத்திக் கொண்டால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் கிடைக்கும்.இதனால் மின்கட்டணம் என்ற ஒன்று இனி இருக்காது.
இந்த சோலார் பேனலை பொருத்த மத்திய அரசு மானியம் வழங்குகிறது.1 கிலோவாட் திறன் கொண்ட சோலார் பேனல்களை பொருத்த ரூ.30,000 மானியம் வழங்கப்படுகிறது.2 கிலோவாட் திறன் கொண்ட சோலார் பேனல்களை பொருத்த ரூ.60,000 மானியம் வழங்கப்படுகிறது.3 கிலோவாட் திறன் கொண்ட சோலார் பேனல்களை பொருத்த ரூ.78,000 மானியம் வழங்கப்படுகிறது.இந்த மானியம் நுகர்வோரின் வங்கி கணக்கில் 30 நாட்களுக்குள் நேரடியாக செலுத்தப்படுகிறது.இந்த மானியத்தை பெற pmsuryaghar.gov.in, www.solarrooftop.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.
மேலும் பிரதமரின் சூரிய வீடு திட்டத்தில் சோலார் பேனல்களை பொருத்த 7% குறைந்த வட்டியில் ஸ்டேட் பேங்க் போன்ற வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது.