நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே செம்பு,பித்தளை,இரும்பு போன்ற உலோகங்களால் ஆன பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த பாத்திரங்களை பயன்படுத்துவதால் அதிக பலன்கள் கிடைக்கும் என்பதால் அதன் பயன்பாடு தற்பொழுது அதிகரித்துள்ளது.
அலுமியம்,நான் ஸ்டிக்,பிளாஸ்டிக் போன்ற பாத்திரங்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.
மக்கள் மீண்டும் தங்கள் பாரம்பரியத்திற்கு மாற விரும்புகின்றனர்.மண் பாத்திரம்,செம்பு பாத்திரம்,பித்தளை மற்றும் இரும்பு பாத்திரங்களை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தவும் தயாராக உள்ளனர்.இதில் செம்பு பாத்திரம் தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் பில்டராக உள்ளது.
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் கிட்டத்தட்ட 4 மணி நேரத்தில் பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டுவிடும்.செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அருந்தி வந்தால் இரத்த சோகை குணமாகும்.
தைராய்டு சுரப்பி சீராக செயல்பட செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்தலாம்.கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவு தேவைப்படுவதால் செம்பு பாத்திர நீர் அருந்தி பலன் பெறலாம்.ஆனால் செம்பு பாத்திரத்தை முறையாக கையாள தவறினால் அதில் ஊற்றும் தண்ணீர் நமக்கு நஞ்சாக மாறவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது.
செம்பு பாத்திரத்தை நன்றாக சுத்தம் செய்யாமல் தண்ணீர் ஊற்றினால் அதில் உள்ள தாமிரம் கசிந்து தண்ணீரில் கலந்துவிடும்.இந்த நீரை தொடர்ந்து பருகும் பொழுது உடலில் தாமிரக் கழிவுகள் அதிகளவு படிந்து நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
மேலும் முறையாக சுத்தம் செய்யப்படாத செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்தினால் வாந்தி,வயிற்றுப்போக்கு,குமட்டல் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.