உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடிவருவதால் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்த ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீட்டித்தள்ளார். இதில் இரண்டாம் கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில்தான் நாம் கவனமாக இருந்து நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும் என்றும் கூறினார்.
ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களில் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டார்களோ இல்லையோ மது பிரியர்கள் சாராயம் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.
இதற்கிடையில் சாராயம் கிடைக்காத விரக்தியில் குடிமகன்கள் சிலர் தற்கொலை செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் சிலர் போதைக்காக கண்ட ரசாயனங்களையும் குடித்து இறந்து வருகின்றனர். கொரோனா பலியோடு குடிமகன்கள் இறப்பும் உயர்வதால் அரசு செய்வதறியாது தவித்து வந்தது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள அண்ணாமலை நகர் பகுதியில், இளைஞர்கள் சிலர் சாராயம் கிடைக்காத விரக்தியால் விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். ஒரு வீட்டில் 4 இளைஞர்கள் சேர்ந்து யூடியூப் வீடியோவை பார்த்து சாராயம் காய்ச்சி குடித்துள்ளனர்.
அந்த இளைஞர்கள் எதிர்பார்த்தபடியே சரியான பதத்தில் வந்ததும், அதனை குடித்து பார்த்து நண்பர்களிடம் சொல்லி பெருமை அடைந்துள்ளனர். இதனை நண்பர்கள் தங்களுக்கும் கேட்டதால், அவ்விளைஞர்கள் தெரிந்தவர்கள் வட்டாரத்தில் விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இளைஞர்களை மஃப்டியில் சென்று கையும் களவுமாக பிடித்துள்ளனர். அவர்களிடம் சாராயம் எவ்வாறு காய்ச்சினார்கள் என்று விசாரித்த போது, வீட்டிலேயே யூடியூபை பார்த்து குக்கரை பயன்படுத்தி காய்ச்சியதாக திடுக்கிடும் தகவல் அளித்துள்ளனர்.
குற்றத்தை ஒப்பு கொண்டதால் சம்பந்தப்பட்ட இளைஞர்களை கைது செய்த காவல்துறை, அவர்கள் வீட்டிலிருந்த 220 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த தகவலை இணையதளத்தில் பார்த்த நெட்டிசன்கள் சிலர் ‘ஏண்டா இப்படி பண்ணி நம்ம ஊர் மானத்தை வாங்குறீங்க’ என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.