Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெளியூரில் இருந்து சொந்த ஊர் திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி அதைக் கொண்டாட வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும் வெளியூரில் வேலை செய்வோர் ஆகியோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தயாராகி வருகின்றனர்.

இதையடுத்து கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி இன்று முதல் 13-ஆம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி வழக்கமாக இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் பிற ஊர்களிலிருந்து வரும் பேருந்துகளில் சுமார் கூடுதலாக 6 ஆயிரத்து 468 சிறப்பு பேருந்துகளும் என மொத்தமாக 16 ஆயிரத்து 768 பேருந்துகள் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும் மற்றும்  தாம்பரம் பேருந்து நிலையத்தில் 1 முன்பதிவு மையமும் என மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன எனவும் கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுகுன்றம்-செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு போக்குவரத்து துறை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் பேருந்து புறப்படும் நேரம், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்துகொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 9445014450, 9445014436 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் மற்றும் ஆம்னி பேருந்துகள் குறிப்பிட்ட கட்டணத்துக்கும் அதிகமாக வசூல் செய்தால் அது குறித்து புகார் தெரிவிக்க 1800425 6151, 044-24749002 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை  தெரிவித்துள்ளது.

Exit mobile version