Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு அரசு தேர்வுதுறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு அரசு தேர்வுதுறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இறுதி வரை பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், வைரஸ் பரவல் குறைந்து கொண்டு வந்ததையடுத்து, பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். எனவே பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடித்து, அவர்களை பொதுதேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியது.

இதையடுத்து, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்று முடிந்தது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு இந்த (மார்ச்) மாதத்தின் இறுதியில் தொடங்க உள்ளது. இந்நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை கடந்த வார புதன்கிழமையன்று வெளியிடப்பட்டது.

அதன்படி, பத்தாம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரையும், பதினொன்றாம் வகுப்புக்கு மே 9-ந் தேதி தொடங்கி  மே.31ஆம் தேதி வரையும், மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று (மார்ச் 9-ந் தேதி) முதல் 16-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களுடைய விண்ணப்ப பதிவினை செய்து கொள்ளலாம்.

இந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறுபவர்கள் சிறப்பு அனுமதி முறையில் வருகிற 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையில் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவுசெய்து கொள்ளலாம். மேல்நிலை பொதுத்தேர்வுக்கு ரூ.1,000-ம், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு ரூ.500-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version