மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்த முக்கிய தகவல்!

0
123

மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கும் விதத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் செங்கேணி அம்மன் திருக்கோவில் தெருவில் வீடுகளுக்கே சென்று மழைக்கால நோய்க்கான சிகிச்சை முன்னெடுக்கப்படுவதை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

அந்த சமயத்தில், சோழிங்கநல்லூர் சட்டசபை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மணிஷ், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாநகர நல அதிகாரி, உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் தெரிவித்த தாவது,

சென்னையில் எங்கெல்லாம் மழை நீர் தேங்கி உள்ளதோ அந்தப் பகுதிகளை தேர்ந்தெடுத்து அவரவர் வீடுகளுக்கு சென்று சளி, காய்ச்சல், இருமல், வயிற்றுப் போக்கு மற்றும் சேற்றுப்புண் இருக்கிறதா என்று கேட்டு அறிந்து அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழக தமிழக முதல்வரால் சென்ற ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஆரம்பித்து வைக்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரையில், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், பிசியோதெரபி, உள்ளிட்ட பல மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது. தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின்படி இதுவரையில் 37 லட்சத்து 43 ஆயிரத்து 15 பேர் பயன் அடைந்திருக்கிறார்கள்.

அந்த விதத்தில், புதிய முயற்சியாக சென்னையில் மழையால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தேர்ந்தெடுத்து அவர்களுடைய வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்க்கும் திட்டம் சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதியில் ஆரம்பிக்க வைக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்.

மாநகராட்சியின் சார்பாக ஒவ்வொரு நாளும் 500 பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவ பணிகளுக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் அரசு புது மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவர்கள், மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறைக்கு உறுதுணையாக செயல்படுவதற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தேவைக்கு ஏற்றவாறு மற்ற மாவட்டங்களில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார்.