தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்கள் எழுதிய காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு இன்று (அக். 23) முதல் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாணவர்கள் தங்கள் படித்த பள்ளி மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வுமையம் மூலமும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் அணிவது, சமூக இடைவெளியை கடை பிடிப்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.