மழைக்காலங்களில் புத்தகத்தை குடையாக பிடிக்கும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இலவங்கார்குடி ஊராட்சியை சேர்ந்த பவித்திர மாணிக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் எல்.கே. ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை என மொத்தம் 430 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
குறிப்பாக காட்டூர்,பவித்திரமாணிக்கம், இலவங்கார்குடி,பெரும்புகலூர், தொழுவனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய குடுபங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் மொத்தமாக ஏழு வகுப்பறை கட்டிடங்கள் மட்டுமே உள்ளன. ஒரு வகுப்பறைக்கு 40 பேர் மட்டுமே அமர்ந்து படிக்க இடவசதி உள்ள நிலையில்,ஒவ்வொரு வகுப்பறையிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களை அமர வைத்து பாடங்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பறை கட்டிடம் இன்றி மரத்தடியில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தப்படுகிறது.
இப்போது அதிக அளவு மழை வரும் நிலையில் மழை வரும் நேரங்களில் அருகாமையில் உள்ள காளியம்மன் கோவிலில் மாணவர்கள் அமர வைக்கப்படுகின்றனர்.சிறிய மழை என்றால் பள்ளி வராண்டாவில் இந்த மாணவ மாணவிகள் அமர வைக்கப்படுகின்றனர்.
மேலும் பள்ளியில் உள்ள 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சத்துணவு கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தின் மேற்பகுதி சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. தளவாடப் பொருட்களை வைப்பதற்காக அமைக்கப்பட்ட லாப்டர் சிலாப் எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது.
மழைக்காலங்களில் மேற்கூரையில் மழை நீர் கசிந்து சத்துணவு கூட்டத்திற்குள் வருவதால் சமைக்க முடியாத சூழல் நிலவுகிறது. இவ்வாறு ஒரு பள்ளி இருக்கின்றது ஆனால் அரசானது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது வெறும் வேதனையை உண்டாக்குகிறது எனவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி வருகின்றார்கள்.