எந்த வகையில் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள்? நயினார் நாகேந்திரன் கேள்வி!!
திமுக ஆட்சி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு முழுமையாக வரவில்லை என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மட்டும் தான் திராவிடத்தை பற்றி பேசுகிறோம். மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும், மக்களுக்காக நல்ல சட்டங்களை கொண்டு வர வேண்டும், மக்களுக்காக சேவை செய்ய வேண்டும், மக்கள் மனதில் இடம் பெற வேண்டும் இதுதான் நல்லாட்சியின் அடையாளம்.
திராவிட மாடல் ஆட்சி என்பது எந்த வகையில் என்பது எனக்கு தெரியவில்லை. இரண்டு ஆண்டுகள் திமுக ஆட்சியில் அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக எந்த திட்டமும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக பல காவல் நிலையங்களில் புகார் அளித்தால் அதற்கான மனு ரசீது கூட கொடுப்பதில்லை. திமுக ஆட்சி அமைவதற்கு முன்பே மணல் திருட்டு தொடர்பாக ஒருவர் பேசினார்.
அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் பாதுகாப்பு இருந்தால் மட்டுமே அமைதி பூங்கா என சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.