உயர்ந்த அளவில் வருவாய் ஈட்டுபவர்கள் அதிகபட்ச வருமான வரி செலுத்தி வருகின்றனர், கடந்த நிதியாண்டில் மிகப்பெரிய வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்துபவர்கள் பலரும் வருமான வரி விதிப்பை மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த முறை வரி செலுத்துவதிலிருந்து நடுத்தர மக்களுக்கு ஒரு நல்ல செய்தியினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் 2023 பிப்ரவரி 1 அன்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட இருக்கிறது, இதில் வரி செலுத்துவோருக்கு சில நல்ல விஷயங்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
தற்போது ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம் வரை உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை, ஆனால் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானம் பெறுபவர்களுக்கு 5 சதவீத வரியை அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால் ரூ.5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக வருமானம் கிடைத்தால் நீங்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. தற்போது ரூ.2.5 லட்சத்தை ரூ.5 லட்சமாக உயர்த்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யப்பட்டு ரூ.2,5 லட்சமாக உயர்த்தப்பட்டது, அதற்கு முன்னர் வரம்பு ரூ.2 லட்சமாக இருந்தது.
இந்த முறை தனிநபர் வரி விலக்கு வரம்பை அதிகரிக்க அரசு பரிசீலித்து வருகிறது. மேலும் இந்த தடவை பட்ஜெட்டில் அரசு புதிய மற்றும் பழைய வரி முறைகளில் நல்லதொரு மாற்றங்களைச் செய்யும் என்று மக்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.