தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு சமூக விரோத செயல்கள் மற்றும் குற்றங்கள் உள்ளிட்டவை கட்டுப்படுத்த பெற்றிருப்பதாக தமிழக அரசு தெரிவித்து வருகிறது. ஆனால் திமுக பொறுப்பேற்ற நாள் முதல் அது போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து வருகிறது, அதுவும் அதிகமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இது போன்ற சமூக விரோத செயல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று முதலமைச்சர் அங்கேயே பேசி வருகிறார் இருந்தாலும் உண்மை என்பது வேறுமாதிரியாக இருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் இந்த விடியா அரசு அமைந்த பிறகு சமூக விரோத செயல்கள் அதிகரித்திருப்பதை அறிக்கை மூலமும், சட்டப்பேரவை விவாதங்களிலும், சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் கடந்த ஒரு வருட காலத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை உள்ளிட்டவை ஆளுங்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர்களின் துணையுடன் நடப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அம்மாவின் அரசால் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட கள்ளச்சாராயம் தற்போதைய இந்த அரசால் ஆறாக ஓடுகிறது. மெரினா கடற்கரை மணலில் புதைக்கப்பட்டிருக்கும் கள்ளச்சாராய ஊரல்கள், போலி மதுபாட்டில்களை தோண்டி எடுக்கும் செய்தியினை பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது என தெரிவித்துள்ளார்.
ஆகவே அம்மா அரசின் ஆட்சியில் காவல்துறை எப்படி சுதந்திரமாக செயல்பட்டதோ அதேபோல இந்த விடியா அரசும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களிலிருந்து பொது மக்களை காக்க காவல்துறையினரின் கைகளை தட்டி போடாமல் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.