ஓகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு… சுற்றுலாப் பயணிகளுக்கு தடை…!

0
90

 

ஓகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு… சுற்றுலாப் பயணிகளுக்கு தடை…

 

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகமானதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கர்நாடக மாநிலம் மற்றும் கேரளா மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரளா மாநிலத்தின் வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்றது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாகியுள்ளது.

 

இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 22600 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

 

கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் காவிரி ஆற்றின் மூலமாக அந்த தண்ணீர் முழுவதும் கர்நாடகம் தமிழகம் மாநிலங்களின் எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு வந்தது. நேற்றைய(ஜூலை 27) நிலவரப்படி வினாடிக்கு 19000 கன அடி தண்ணீர் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் வந்து கொண்டிருந்தது. அது இன்று(ஜூலை28) காலை முதல் 20000 கன அடி தண்ணீராக மாறியுள்ளது.

 

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் இன்று காலை முதல் வினாடிக்கு 20000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் பரிசல் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.