இந்தியாவின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு டிவிட்டர் நிறுவனம் இணங்க வேண்டும் என மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச் சகம் புதிய ஒழுங்கு விதிகளை கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவித்தது. இந்த விதிகளை ஏற்றுக் கொள்ள சமூக வலைதளங்களுக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. காலக்கெடு கடந்த மே 25-ம் தேதியுடன் நிறைவடைந்ததால், புதிய விதிகள் நடைமுறைக்கு வந்தன.
இதனை ஏற்று ஃபேஸ்புக், வாட்ஸாப் உள்ளிட்ட நிறுவனங்கள், இந்தியாவில் குறைதீர்க்கும் அலுவலர்களை பணியில் அமர்த்தியுள்ளன. அதே நேரத்தில் டிவிட்டர் நிறுவனம் மட்டும் புதிய விதிமுறைகளை ஏற்று குறைதீர்க்கும் அலுவலர்களை நியமிக்காமல் வேறு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தது.
இந்நிலையில், டிவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை அறிவிக்கை அனுப்பியுள்ளது. அதில், டிவிட்டர் நிறுவனம் நியமித்துள்ள அதிகாரிகள், விதிகளுக்கு உட்பட்ட சுட்டுரையின் பணியாளர்கள் அல்ல என்றும், இந்திய மக்களின் குறைகளை தீர்க்க எந்த திட்டமும் வகுக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், விதிகளுக்கு இணங்க வேண்டும் என இறுதி நோட்டீஸ் அனுப்புவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, தவறினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளது.