Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள், படிக்கும் நாடுகளுக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்? வெளியுறவுத்துறை விளக்கம்!

MEA

MEA

வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள், படிக்கும் நாடுகளுக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்? என வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்த ஆரம்பித்ததில் இருந்து, பல்வேறு நாடுகள் விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை நிறுத்தின. இதனால், வெளிநாடுகளில் பணிக்காகவும், படிப்புக்காகவும் சென்று தவித்து வந்தவர்களை சிறப்பு விமான சேவை மூலம் ஒவ்வொரு நாடும் அழைத்து வந்தன.

இந்தியாவும் இதே போன்று, பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மாணவர்களையும், வேலை இழந்து தவித்தவர்களையும் தாயகம் அழைத்து வந்தது. வேலை இழந்தவர்கள், தாயகத்திலேயே வேலை தேடிக்கொண்டோ அல்லது மறுபடியும் வேலை கிடைத்து வெளிநாடுகளுக்கோ சென்று கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், உலகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் படித்து வந்த இந்திய மாணவர்கள் தாயகத்திலேயே தங்கியுள்ளனர். தற்போது சில நாடுகளில் கொரோனா தொற்று இல்லாததால் கல்வி நிலையங்களுக்கு அனுமதி அளித்து வருகின்றன.

இதனால், அந்த நாடுகளில் இருந்து தாயகம் வந்தவர்கள் படிப்பை தொடர வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால், பெரும்பாலான நாடுகளில் இந்தியாவில் இருந்து விமான போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளதால், மாணவர்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் படிக்கும் நாடுகளுக்கு செல்ல புதிய ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை செய்து வருகிறது. வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள், தமது தாயகம் வருகைக்குப் பிறகு மீண்டும் தாங்கள் படிக்கும் நாடுகளுக்கு செல்ல முடியாமலிருந்தால், அவர்கள் வெளியுறவு அமைச்சகத்தின் OIA-II பிரிவை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரீந்தம் பக்ஷி தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

சீனாவில் மட்டும் சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் மீண்டும் அங்கு செல்வதற்கான சீன அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version