2028 இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்ல மத்திய அரசின் புதிய முயற்சி
2028 ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்வதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய இளைஞர் நலன் & விளையாட்டு (தனிப்பொறுப்பு) மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு.கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னையில் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு அறிவியலுக்கான என்.பி.வி.ராமசாமி உடையார் ஹாக்கி மையத்தை இன்று (29.10.2019) திரு.கிரண் ரிஜிஜூ தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், உலகில் ஒலிம்பிக் விளையாட்டை விட வண்ணமயமான நிகழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது என்றார். ஒரு நாட்டிற்கு விளையாட்டை தவிர பெருமை தேடித் தருவது வேறு எதுவாகவும் இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் ஒலிம்பிக் சாம்பியன்களை அதிக அளவில் உருவாக்க இந்த அரசு முயற்சித்து வருவதாக கூறிய அவர், இதற்காக ஒலிம்பிக் நடவடிக்கை குழு ஒன்றை பிரதமர் அமைத்துள்ளதாக தெரிவித்தார். விளையாட்டு கலாச்சாரத்தை ஏற்படுத்த, வெளிப்படைத்தன்மையை கடைப்பிடித்தல், அனைத்து தரப்பினருக்கும் சமவாய்ப்பு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விளையாட்டுத் துறையை மேம்படுத்த நிதியுதவி அளிப்பது தவிர்க்க முடியாதது என்றும் அவர் கூறினார். முன்பு சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு அரசு அறிவிக்கும் பரிசுத் தொகை கால தாமதமாக கிடைத்து வந்ததை சுட்டிக்காட்டிய அவர், இதனை தவிர்க்க சம்பந்தப்பட்ட விளையாட்டு வீரர்கள் பதக்கம் வென்று இந்தியாவில் வந்து இறங்குவதற்கு முன்பாகவே அவர்களுக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு, அவர்கள் இந்தியா வந்து இறங்கியவுடன் அதற்கான காசோலை கிடைப்பதை உறுதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
2028 ஒலிம்பிக் பதக்க பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா இடம் பிடிக்க செய்வதே நமது இலக்கு என்றார். இதற்கான ஆரம்பகட்ட பணிகளை அரசு இப்போதே தொடங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உணவு, பயணச் செலவு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் அனைத்தையும் மத்திய அரசு வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த விளையாட்டுத் துறையை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஏதுவாக, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை விளையாட்டு ஒரு முக்கிய பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது மத்திய அரசின் நிலைப்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட பெரும் மாற்றம் என்று குறிப்பிட்ட அமைச்சர் திரு.கிரண் ரிஜிஜூ இந்த நடவடிக்கை விளையாட்டுத் துறையை நம் நாட்டின் கல்வி முறையில் முக்கிய இடம் பெற செய்யும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக விழாவில் பங்கேற்ற ஒலிம்பிக் ஹாக்கி வீரர்கள், மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடிய மத்திய அமைச்சர், ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் விளையாட்டுத் துறைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வசதிகளை பார்வையிட்டார்.
Source: PIB