Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவின் பொதுக் கழிப்பறையின் முன்னோடி காலமானார்… பிரதமர் மோடி அவர்கள் இரங்கல்… 

 

இந்தியாவின் பொதுக் கழிப்பறையின் முன்னோடி காலமானார்… பிரதமர் மோடி அவர்கள் இரங்கல்…

 

இந்திய நாட்டின் பொதுக் கழிப்பறையின் முன்னோடி என்று அழைக்கப்பட்ட பிந்தேஷ்வர் பதக் தன்னுடைய 80வது வயதில் காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

 

இந்திய நாட்டின் பொதுக் கழிவறையின் முன்னோடியாக கருதப்படுபவர் பிந்தேஷ்வரர் பதக். இவர் சமூக ஆர்வலர். 1970ம் ஆண்டு சேவை நிறுவனத்தை தொடங்கிய பிந்தேஷ்வரர் பதக் பொதுக் கழிவறைகளை கட்டி பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தி வந்தார்.

 

அது மட்டுமில்லாமல் திறந்த வெளியில் மனிதர்கள் மலம் கழிப்பதற்கு எதிராகவும், மனித கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதற்கு எதிராகவும் பல நடவடிக்கைகளை எடுத்தார்.

 

பிந்தேஷ்வரர் பதக் அவர்களின் பொதுக் கழிவறை திட்டத்தின் அடிப்படையில் அவருடைய தொண்டு நிறுவனம் மூலமாக இந்திய நாட்டில் 1,50,000க்கும் மேற்பட்ட பொதுக் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது.

 

இந்தியாவின் பொதுக் கழிவறையின் முன்னோடியாக இருந்த பிந்தேஷ்வரர் பதக் அவர்கள் சமூகப் பணிக்காகவும், தன்னார்வ பணிக்காகவும் பத்ம பூஷன் விருது பெற்றுள்ளார். பல விருதுகளை பெற்ற பிந்தேஷ்வரர் பதக் அவர்களுக்கு பல நாடுகள் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. 80 வயதான பிந்தேஷ்வரர் பதக் அவர்கள் இன்று(ஆகஸ்ட்15) திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.

 

சுதந்திர தினமான இன்று வீட்டில் தேசியக் கொடி ஏற்றிய பிறகு வீட்டில் இருந்த பிந்தேஷ்வரர் பதக் அவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக பிந்தேஷ்வரர் பதக் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

இந்தியாவின் பொதுக் கழிவறையின் முன்னோடியாக இருந்த சமூக ஆர்வலர் பிந்தேஷ்வரர் பதக் அவர்களின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version