Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விமான பயணிகள் கவனத்திற்கு…விமான நிலையத்தின் விதிகளில் அதிரடி மாற்றம் !

மும்பையில் அமைந்துள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கென்று சில புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தற்போது டெல்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் பயணிகளுக்கு சில புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி விமானம் புறப்படும் நேரத்திற்கு 3.5 மணி நேரத்திற்கு முன்னதாகவே பயணிகள் விமான நிலையத்தை சென்றடைய வேண்டும் கூறப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய நிறுவனமான இண்டிகோ விமான பயணிகளை விமானம் ஏறும் நேரத்திற்கு சுமார் 3.5 மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்தை அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் பயணிகள் குறைந்த எடை கொண்ட பைகளையே கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற மாதங்களை காட்டிலும் டிசம்பர் மாதத்தில் தான் வழக்கத்தை விட அதிகளவிலான பயணிகள் விமான நிலையத்திற்கு வந்து செல்வது தெரியவந்துள்ளது, இதன் காரணமாக செக் இன் மற்றும் போர்டிங் செயல்முறைக்கு அதிக நேரம் ஆகலாம். இதனை தவிர்க்கவே தற்போது நிறுவனம் சில மணி நேரங்களுக்கு முன்னதாகேவ விமான நிலையத்திற்கு பயணிகளை வர அறிவுறுத்தியுள்ளது. விமானத்தில் பயணம் செய்யப்போகும் பயணிகள் 7 கிலோ எடையுள்ள கைப்பைகளை மட்டுமே கொண்டு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனது விமானங்களில் பயணிக்கும் பயணிகள் ஐஜிஐ விமான நிலையத்தின் கேட் எண் 5 மற்றும் 6-ல் இருந்து வர வேண்டும் என்று இண்டிகோ கூறியுள்ளது, முன்னர் நிறுவனம் ஐஜிஐயில் 14 வாயில்களில் இருந்து பயணிகளுக்கு நுழைவு வழங்கியது. மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சர்வதேச நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 3.5 மணி நேரத்திற்கு முன்னதாகவும், உள்நாட்டு விமானப் பயணிகள் 2.5 மணி நேரத்திற்கு முன்னதாகவும் விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Exit mobile version