Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து..!! கடலூரில் அதிர்ச்சி!

கடலூர் அருகே கிராம மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னால்லகரம் கிராமத்தில் ஊராட்சி சார்பில் காலை, மாலை என இரு வேலையும் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை குடிநீருக்காக அப்பகுதி மக்கள் காத்துக் கொண்டிருந்த போது குடிநீர் வழக்கத்திற்கு மாறாக வெள்ளை நிறத்தில் வந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் ஒருவர், குடிநீரை யாரும் பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து மொத்த குடிநீரும் முற்றிலுமாக நீக்கப்பட்டது.

இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்தது தனிநபர் விரோதத்தினாலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பூச்சிக்கொல்லி கலக்கப்பட்ட குடிநீரை பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Exit mobile version