Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உக்ரைன் ராணுவத்தில் சேரந்த தமிழக மாணவர்! பெற்றோரிடம் விசாரணை நடத்திய உளவுத்துறை அதிகாரிகள்!

கடந்த 24 ஆம் தேதி ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் தொடுத்தது இதற்கான உத்தரவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வெளியிட்டிருந்தார். ஆகவே அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

நாள்தோறும் விமானங்கள் மூலமாக பல்லாயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு வருகிறார்கள். உக்ரைனிற்குள் செல்ல முடியாத சூழ்நிலையில், உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளின் உதவியோடு இந்தியர்களை மீட்டு வருகிறது. மத்திய அரசு அதோடு ரஷ்யாவும் இந்தியர்களை மீட்கும் பணியில் இறங்கியிருக்கிறது.

இந்த நிலையில், 13வது நாளாக இந்த போர் தொடர்ந்து வருகிறது இந்த போரின் காரணமாக, உக்ரைனில் சிக்கியிருக்கின்ற இந்தியர்கள் அதிலும் குறிப்பாக மாணவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அவர்களை மத்திய அரசு பல்வேறு வழிகளில் இந்தியாவிற்கு மீட்டு வருகிறது இந்த சூழ்நிலையில், இந்திய மாணவர் ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்திருப்பதும், அவர் ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கேற்றிருக்கும் தகவலும் வெளியாகியுள்ளது.

அதோடு அவர் இந்தியாவிற்கு திரும்ப மாட்டேன் என்று தெரிவித்ததாகவும், தகவல் கிடைத்திருக்கிறது. இது தொடர்பான விவரம் வருமாறு கோயமுத்தூர் சுப்பிரமணிய பாளையம் சுவாதி கார்டனை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜான்சி லட்சுமி இவர்களுக்கு சாய் நிகேஷ், சாய் ரோஷித் உள்ளிட்ட இரு மகன்கள் இருக்கிறார்கள்.

சாய்நிகேஷ் காரமடையிலிருக்கின்ற தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தார். இவர் சிறு வயது முதலே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என விருப்பம் கொண்டார் என்று தெரிகிறது. அதனடிப்படையில் அவர் 2 முறை முயிற்சி செய்தும் உயரம் குறைவு என்ற காரணத்தால், இந்திய ராணுவத்தில் சேர முடியவில்லையாம்.

ஆகவே அமெரிக்க ராணுவத்தில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்து சென்னை தூதரகத்தை அணுகியிருக்கின்றார் அதிலும் இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர் கடந்த 2019 ஆம் வருடம் உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரிலிருக்கின்ற நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக் கழகத்தில் விமானவியல் துறையில் சேர்ந்து படித்து வந்தார் என்று தெரிகிறது.

இதற்கு நடுவே அவருக்கு உக்ரேனிலிருக்கின்ற வீடியோ கேம் டவுன்லோட் மென்ட் நிறுவனத்தில் பகுதி நேர வேலை கிடைத்திருக்கிறது ஆகவே படித்துக் கொண்டே வேலை செய்து வருவதாகவும், கைபேசியில் தன்னுடைய பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது இதன் காரணமாக, அங்கே இருக்கின்ற பதற்றமான சூழ்நிலை காரணமாக, வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய நாடுகளுக்கு செல்ல ஆரம்பித்தார்கள். இதே போல இவரையும் ஊருக்கு வந்து விடுமாறு பெற்றோர்கள் அழைத்தார்கள்.

அப்போது அவர் தெரிவித்ததாவது ஜார்ஜியா நேஷனல் துணை இராணுவப் பிரிவில் சேர்ந்து விட்டதாகவும் ரஷ்யாவிற்கு எதிராக போரிட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக இந்தியா திரும்புமாறு அவரை அழைத்திருக்கிறார்கள்.

ஆனாலும் அவர் தான் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனாலும் நிம்மதி பெறாத பெற்றோர்கள் மகனை மீட்டுத் தர வேண்டும் என்று இந்திய வெளியுறவு துறைக்கு ஈமெயில் மூலமாக தகவல் தெரிவித்தார்கள்.

இதுகுறித்து மத்திய, மாநில, அரசுகளின் உளவுத் துறையைச் சார்ந்தவர்கள் தீவிர விசாரணையில் இறங்கினார்கள். முதல்கட்டமாக அவருடைய பெற்றோரிடம் விசாரணை செய்ததாக தெரிகிறது.

எதிர்வரும் ஜூலை மாதம் படிப்பு முடிந்து நாடு திரும்பிவிடுவான் என நினைத்திருந்த நிலையில் அவர் போர் நடைபெறும் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து இருப்பதால் தங்களுடைய மகனின் நிலை தொடர்பாக பெற்றோர் கவலை அடைந்திருக்கிறார்கள்.

உக்ரைனில் போர் நடைபெற்று வருவதால் மகனின் நிலை தொடர்பாக பரிதவித்து வருவதாகவும், எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை என்றும் அவருடைய பெற்றோர் தெரிவித்து விட்டார்கள்.

உக்ரேனில் போர் பதற்றம் நிலவி வருவதன் காரணமாக, இந்திய மாணவர்கள் நாட்டிற்கு திரும்பி வரும் நிலையில், கோயம்புத்தூரை சார்ந்த மாணவர் சாய் நிகேஷ் மட்டும் இங்கே வராமல் அந்த நாட்டு ராணுவத்தில் சேர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக போர் புரிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் இவரை போன்ற இந்திய மாணவர்கள் வேறு யாராவது உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்திருக்கிறார்களா? என மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Exit mobile version