Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சங்கரன்கோவில் பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக கடைகளை காலி செய்வதற்கு இடைக்கால தடை

சங்கரன்கோவில் பேருந்து நிலையம்

சங்கரன்கோவில் பேருந்து நிலையம்

சங்கரன்கோவில் பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக கடைகளை காலி செய்வதற்கு இடைக்கால தடை

சங்கரன்கோவில் அண்ணா பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக காந்திஜி நூற்றாண்டு நினைவு நாள் அங்காடி உள்ள கடைகளை காலி செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினசரி நாளங்காடி வியாபாரிகள் சங்கம் சார்பில் துணை செயலர் சந்திரசேகரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தெரிவித்துள்ளதாவது.

அதில், “சங்கரன்கோவில் அண்ணாநகர் பேருந்து நிலையம் அருகே 50 சென்ட் பரப்பளவில் காந்திஜி நூற்றாண்டு நினைவு நாள் அங்காடி அமைந்துள்ளது. இங்கு தினசரி நாளங்காடி வியாபாரிகள் சங்கத்திற்கு உட்பட்ட 63 கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 39 கடைகள் கதவுடனும் 24 கடைகள் திறந்தவெளி கடைகளாகவும் உள்ளது.

தினசரி வருமானத்தை கொண்டு இங்குள்ள வியாபாரிகள் கடைகளை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கடைகளுக்கு தினசரி வாடகை அடிப்படையில் வாடகை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கடைகளின் வாடகையை ஒப்பந்ததாரர் பெற்று வருகின்றார். ஒப்பந்ததாரருக்கு 2023 ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்ணா பேருந்து நிலையத்தை இடித்து விரிவாக்கம் செய்து புதுப்பிப்பதற்காக காந்திஜி நூற்றாண்டு நினைவு நாள் அங்காடிகளை இடிப்பதற்கான நோட்டீஸ் 2022 மே 27 ஆம் தேதி மற்றும் 2022 ஜூன் 7ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது.

காந்திஜி நூற்றாண்டு நினைவு நாள் அங்காடி இடிப்பது தொடர்பான கூட்டத்தில் தினசரி வியாபாரிகள் கலந்து கொண்டோம் ஆனால் எங்களது கருத்துக்களை கேட்கவில்லை.

ஏற்கனவே சங்கரன்கோவில் பகுதியில் 8.5 ஏக்கர் பரப்பளவில் பெரியார் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ளூர் பேருந்துகள் இயக்கவும், பெரியார் பேருந்து நிலையத்தில் வெளியூர் பேருந்துகள் இயக்கவும் காந்திஜி நூற்றாண்டு நினைவு நாள் அங்காடி இடிக்க கூடாது என அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, சங்கரன்கோவில் அண்ணா பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக காந்திஜி நூற்றாண்டு நினைவு நாள் அங்காடி உள்ள கடைகளை காலி செய்வதற்கு இடைகால தடை விதிக்கவும், மேலும் புதிய பெரியார் பேருந்து நிலையத்தில் வெளியூர் பேருந்துகளை இயக்கி அண்ணா பேருந்து நிலையத்தை புதுப்பித்து உள்ளூர் பேருந்துகளை இயக்க உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, சங்கரன்கோவில் அண்ணா பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக காந்திஜி நூற்றாண்டு நினைவு நாள் அங்காடி உள்ள கடைகளை காலி செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், வழக்கு குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்

Exit mobile version