தமிழக சட்டசபைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் ஆளும் கட்சி நாள்தோறும் தமிழக மக்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது என்று எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், நாளை தமிழக சட்டசபையில் அதிமுக அரசு தன்னுடைய கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றது. ஆளுநர் உரையுடன் இந்த வருடத்திற்கான முதல் சட்டசபை கூட்டம் ஆரம்பித்த நிலையில், விவசாயிகள் கடன் தகுதி பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை போன்ற சட்ட மசோதாக்கள், ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகத்திற்கான சட்ட மசோதா என நான்கு வருடங்களில் இல்லாத அளவிற்கு அவசர அவசரமாக அனைத்தையும் செயல்படுத்தி வருகிறது மாநில அரசு.
எதிர்வரும் மே மாதத்துடன் இந்த ஆட்சிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை நாளைய தினம் மறுபடியும் கூடுகின்றது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் துணை முதலமைச்சரும் மாநில நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். தமிழ்நாட்டிற்கான பட்ஜெட்டை ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்வதை இது பத்தாவது முறையாகும் என்று சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் விரைவில், தேர்தல் வர இருப்பதால் இந்த பட்ஜெட்டில் மக்களை கவர்வதற்காக பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நிதித்துறை செயலாளர் அதிகாரப்பூர்வமாக அது தொடர்பாக விளக்கம் கொடுப்பது வழக்கமான ஒன்று அதோடு சபாநாயகர் தலைமையில் சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்தலாம் என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற சட்டசபை மைய வளாகத்தில் வ உ சி டாக்டர் சுப்பராயன் மற்றும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் போன்றோரின் உருவப்படங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் திறந்து வைக்கப்பட இருக்கின்றது.