அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் உள் இட ஒதுக்கீடு – புதிய சட்டம் கொண்டுவரப் போவதாக முதல்வர் அறிவிப்பு.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வு அவசியம் என மத்திய அரசு அறிவித்து அதன்படி தேர்வு நடத்தியே மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளிகளில் இடம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை கிராமப்புற மாணவர்களை குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை பொய்யாக்கும் செயலாக பலராலும் பார்க்கப்பட்டது.
இதனை அடுத்து தமிழக அரசு சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. எனினும் கடந்த ஆண்டு மருத்துவ சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை என்பது மிக சொற்பமான எண்ணிக்கையிலேயே இருந்தது. இந்த நிலையை மாற்ற தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்து வழக்கு நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
இதனை அடுத்து நீட் தேர்வில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் அதாவது கிராமப்புற பள்ளிகளிலோ, நகராட்சி பள்ளிகளிலோ, மாநகராட்சி பள்ளிகளிலோ அல்லது ஆதிதிராவிடர் நல பள்ளிகளிலோ ஒன்று முதல் பனிரண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடு வழங்க சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட உள்ளதாக முதல்வர் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் ஒன்று அமைக்கப்படும் அவ்வாணையம் இந்த சட்ட முன்வடிவை கொண்டுவர அரசுக்கு தேவையான தகவல்களை தொகுத்து வழங்கும். அந்த குழுவில் கல்வித்துறை சார்பில் இரண்டு கல்வியாளர்களும் நலவாழ்வுத்துறை சர்ந்த அதிகாரிகளும், சட்டத்துறை சார்ந்த அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருப்பர் எனவும் இவ்வாணையம் ஒருமாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கும் எனவும் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.