NEET தேர்வின் மூலமாக நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான NEET தேர்வுக்கு ஓஎம்ஆர் ஷீட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான விண்ணப்ப பதிவு மற்றும் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 2025 ஆம் ஆண்டிற்கான இளநிலை நீட் தேர்வுக்கு என neet.nta.nic.in இணையதளம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவ கல்வி வாரியத்தால் இறுதி செய்யப்பட்ட இந்த ஆண்டிற்கான பாடத்திட்டங்கள் நீட் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, இயற்பியல் வேதியல் மற்றும் உயிரியல் பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டுக்கான நீட் யுஜி நுழைவுத் தேர்வானது பேனா மற்றும் பேப்பர் முறையில் நடத்தப்படுமா? அல்லது கணினி முறையில் நடத்தப்படுமா? என்று கேள்விகள் எழுந்த நிலையில் கடந்த மாதம் கல்வி மற்றும் சுகாதார அமைச்சகங்கள் இது குறித்த முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தது.மேலும், இது குறித்த ஆலோசனை நடைபெற்று தேசிய தேர்வு முகமை இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வானது பேப்பர் மற்றும் பேனா முறையில் ஓஎம்ஆர் ஷீட் பயன்பாட்டுடன் நடைபெறும் என்றும் தேர்வு எழுதக்கூடிய அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாளில் ஒரே ஷிப்டில் இந்த தேர்வானது நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறது.