Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆளும் கட்சியில் இணையப்போகும் இரு துருவங்கள்?

தமிழக அரசியலில் ஒரு சில நாட்களாக எம்ஜிஆர் பற்றிய விவாதம் மறுபடியும் தலைதூக்க தொடங்கி இருக்கின்றது.

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மேற்கொண்டு இருக்கின்ற தேர்தல் பிரச்சார பயணத்தில், நாகர்கோவிலில் அவர் பேசும் பொழுது நான் எம்ஜிஆரின் வாரிசு என்று தெரிவித்தார். இதற்கு அதிமுக சார்பாக அமைச்சர்கள் மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அதன் பின்பு இதற்கு பதில் கூறிய கமல்ஹாசன், எம்ஜிஆரை பார்க்காதவர்கள் எல்லாம் என்னை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் எம்ஜிஆரின் மடியில் வளர்ந்து வந்தவன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சர்ச்சையானது தொடர்ந்து கொண்டே போக, தமிழக முதலமைச்சரே கமல்ஹாசனை பற்றி பேசும் அளவிற்கு பெரிதாகி விட்டது. இதற்கு முன்னரே நடிகர் ரஜினிகாந்த் மதுரவாயலில் கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்து உரையாற்றியபோது, நான் எம்ஜிஆர் ஆட்சி கொடுப்பேன் என்று தெரிவித்திருந்தார். இப்பொழுது கமல்ஹாசனும் அதே கருத்தை தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் குத்தீட்டி என்ற பெயரில் எம்ஜிஆருக்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் மீது கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அந்தப் பத்திரிகையில், வந்த செய்தி என்னவென்றால், எம்ஜிஆரின் மடியில் வளர்ந்தவன் என்று தெரிவிக்கிறார் கமல்ஹாசன், எம்ஜிஆரின் ஆட்சியை கொடுப்பேன் என்று தெரிவிக்கிறார் ரஜினிகாந்த், இதெல்லாம் போதாது என்று இதற்கு முன்னரே பச்சை எம்ஜிஆர், கிளிப்பச்சை எம்ஜிஆர் என அரை டஜனுக்கும் மேலான நபர்கள் எல்லாம் வந்து போய்விட்டார்கள்.

அடக்கடவுளே, புரட்சித்தலைவர் தன்னுடைய உதிரத்தின் விதை போட்டு உயிராக வளர்த்த இயக்கம் பொன்விழாவை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது. ஆரம்பிக்கப்பட்டு 49 வருடங்களில் 30 ஆண்டுகளுக்கு அதிகமாக தமிழ் நாட்டை ஆளும் ஒரு பெரிய இயக்கமாக உயர்ந்து நிற்கின்றது. தமிழ்நாட்டு மக்களுடைய உள்ளங்களிலும் இல்லங்களிலும் இரட்டை இலை இயக்கம் ஆசனம் போட்டு அமர்ந்து இருக்கின்றது.

நிலைமை இவ்வாறு இருக்க, மக்கள் திலகத்தை தங்கள் அரசியல் பிழைப்பிற்காக சொந்தம் கொண்டாட நினைப்பவர்கள் புரட்சித்தலைவர் பெயரை பயன்படுத்தி அரசியல் அறுவடை செய்துவிடலாம் என்று நப்பாசை படுகிறார்கள். வேண்டுமென்றால் அதிமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினராக இணைந்து கொள்ளலாம், புரட்சித்தலைவரின் கொள்கைகள் இன்னும் கூடுதலாக சிறக்க கழகத்தில் பங்கு பெற்று பணி செய்யலாம் அதைவிட்டுவிட்டு தலைவருடைய பெயரை தெரிவித்து தங்களை பலப்படுத்திக் கொள்ளலாம், என்று நினைப்பது தங்களுடைய அரசியல் இயக்கத்திற்கு உயிர் ஆக்கி விடலாம், என்று கனவு காண்பது கடைந்தெடுத்த பித்தலாட்டம் , என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது எப்படியோ எம்ஜிஆர் உடைய பெயர் இன்னமும் விவாதம் ஆகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

Exit mobile version