ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி
புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தினை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் தன்னை சிறையிலேயே அடைத்து வைத்து சிபிஐ அவமானப்படுத்த விரும்புகிறது என்று ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியோ முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சிபிஐ அமைப்பினால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சிபிஐ காவல் முடிந்த நிலையில், கடந்த 50 நாட்களுக்கும் மேலாகவும் நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இந்த வழக்கில் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு கடந்த 30-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, ப.சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜரானார்கள். மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், ” முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீதோ அல்லது அவர்களின் குடும்பத்தினர் இதற்கு முன் சாட்சியங்களைக் கலைத்ததாக எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை, சாட்சியங்களை அனுகியதாகவோ, பேசியதாகவோ எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை.
அரசுக்கு எந்தவகையிலும் இழப்பீடு ஏற்படுத்தியதாகவும் இல்லை. அவ்வாறு இருக்கும்போது தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்படுகிறது.சிபிஐ அமைப்பு எந்தவிதமான காரணமும் இன்றி, தொடர்ந்து சிறையிலேயே அடைத்துவைத்து அவமானப்படுத்த விரும்புகிறது. ஆதலால் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க வேண்டும் ” என்று வாதிட்டனர்.
சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் வாதம் நாளை நடக்கிறது என்பதால், நாளை வாதத்தைக் கேட்டபின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் மனுமீது உத்தரவு பிறப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிதம்பரத்திடம் விசாரிக்க அனுமதி அளித்தது.ஆனால், திஹார் சிறையில் வைத்தே சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.