3 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்! இந்திய ரயில்வே வெளியிட்ட அதிரடி திட்டம்
வெளியூர் பயணம் என்றாலே அதற்கான டிக்கெட் புக் செய்வது, தங்குவது மற்றும் பயணத்தின் போது சாப்பிட உணவு போன்றவைகள் சாமானிய மக்களுக்கு எட்டாத விலையில் தான் உள்ளது.
குறிப்பாக பயண வழியில் இருக்கும் ஹோட்டல்களில் விலை தாறுமாறாக இருக்கும். பேருந்து பயணத்தில் இப்படி என்றால் ரயில் பயணங்களில் கூட விலையானது பெரும்பாலான மக்கள் வாங்கும் வகையில் இல்லை என்பதே பெரும்பாலோனோர் கருத்து.
அந்த வகையில் இதையெல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கோடை காலம் ஆரம்பித்துள்ள இந்நிலையில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் மக்களுக்கு சலுகை விலையில் தண்ணீர் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்காக இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த திட்டத்தின் படி, 200 கிராம் எடையுள்ள எலுமிச்சை சாதம், புளியோதரை சாதம், தயிா் சாதம் அல்லது கிச்சடி உள்ளிட்டவைகளில் ஏதாவது ஒன்று ‘எகனாமி மீல்ஸ்’ என்ற பெயரில் ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல பூரி மசால் மற்றும் பஜ்ஜி 325 கிராம் எடையில் , ‘ஜனதா கானா’ என்ற பெயரில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் , ‘ஸ்னாக் மீல்ஸ்’ என்ற பெயரில் 350 கிராம் எடையில் மசால் தோசை உள்ளிட்ட தென்னிந்திய உணவு வகைகள் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல இந்த திட்டத்தின் படி 200 மி.லி.அளவில் தண்ணீா் பாட்டிலானது வெறும் ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பயணிகள் சிரமம் இல்லாமல் வாங்கும் வகையில் முன் பதிவு செய்யப்படாத பெட்டிகளுக்கு அருகில் இதற்கான கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.