ஜூன் 30ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து!

0
105

ஜூன் 30ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து!

கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து எதுவும் இயக்கப்படவில்லை.

தற்போது மூன்றாவது முறையாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர்கள் சொந்த மாநிலத்திற்குக் கொண்டு சேர்க்க மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 12ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவங்க முடிவெடுத்தது. அதனைத் தொடர்ந்து 15 சிறப்பு ரயில்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றன.

வரும் 17ம் தேதியுடன் மூன்றாவது ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், ரயில் சேவை வழக்கம் போல் தொடருமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் ஜூன் 30 வரை பயணிகள் ரயிலை இயக்கப் போவதில்லை என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து ஜூன் 30 வரை ரயில்களில் முன்பதிவு செய்த அனைவருக்கும் முழு கட்டணத்தையும் திரும்ப அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இணையதளம் மற்றும் செயலி மூலம் முன் பதிவு செய்தவர்களுக்குத் தானாகவே பயணச் சீட்டு ரத்து செய்யப்பட்டு, பணம் திரும்ப அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போது இயக்கப்பட்டுவரும் 15 சிறப்பு ரயில்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்காக இயக்கப்படும் ‘ஷார்மிக்’ ரயில் சேவை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.