அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
வருகிற சட்டமன்ற தேர்தலில் அரசியல் களத்தில் பாஜக எப்படியாவது இந்த முறை குறைந்தது 10 இடங்களையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது.
வாக்காளர்களை பெரும்பாலும் தங்கள் பக்கம் கவர்வதற்காக பிரபலங்களை தங்கள் பக்கம் இணைத்து வருகிறது. இதில் பாஜகவின் மாநில தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்ட பிறகு இந்த திடீர் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
எல்.முருகனும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்தவர் என்பதால் கட்சிக்கு ஆதரவு கிடைக்கும் என அனைத்து வகையிலும், இளைஞர்களை பெரும்பாலும் கவரும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் அண்மையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை திடீரென்று பாஜகவில் இணைந்தார். அவர் இணைந்த நான்கே நாட்களில் மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இவர் இனிமேல் கட்சி தொடர்பான அனைத்து கலந்துரையாடல்களிலும் பங்கேற்பார் எனவும், தேசிய செய்தி தொலைக்காட்சிகளில் விவாதங்களில் பாஜக சார்பாக பங்கேற்பார் எனவும் கூறி வருகிறார்கள்.
தொண்டர்களிடையே உரையாற்ற வைத்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் அண்ணாமலையை பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்பட இருப்பதாக பாஜக கட்சி தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவில் உள்ள பழைய தலைவர்களை கூப்பில் வைத்துவிட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக பாஜக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் எல்.முருகன் ஒவ்வொரு முறையும் டெல்லி செல்லும் போது யாராவது ஒரு விஐபியை கட்சியில் இணைத்து விடுகிறார் என டெல்லியில் பாஜக தலைவர்கள் பூரிப்படைகின்றனராம்.
அதிமுகவைச் சேர்ந்த புதுக்கோட்டை கார்த்திக் தொண்டைமான் பாஜகவில் இணைய போவதாக பாஜக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.