Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓரங்கட்டப்பட்ட டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் அடுத்து இந்த லிஸ்டில் பாஜகவா? இபிஎஸ் அதிரடி ப்ளான்

EPS OPS TTV Sasikala

EPS OPS TTV Sasikala

ஓரங்கட்டப்பட்ட டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் அடுத்து இந்த லிஸ்டில் பாஜகவா? இபிஎஸ் அதிரடி ப்ளான்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதல்வரான இபிஎஸ் அப்போதிலிருந்து தற்போது வரை டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் என ஒவ்வொருவராய் அதிமுகவிலிருந்து ஓரங்கட்டி வருகிறார்.அந்த வகையில் இந்த லிஸ்டில் அடுத்து இணைய போவது பாஜகவா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

 
அதிமுகவில் கொடிகட்டி பறந்த தென்மாவட்டங்களை சேர்ந்த டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் என ஒவ்வொருவராய் அக்கட்சியிலிருந்து ஓரங்கட்டி வருகிறார் இபிஎஸ். சமீபத்தில் டெல்லி போயிருந்த எடப்பாடி பழனிசாமியிடம் பாஜகவின் அமித்ஷா ‘எலக்ஷன் வர இருக்கு… எல்லோரும் ஒண்ணா இருங்கன்னு’ கூறியுள்ளார்.
அந்தவகையில் பாஜகவின் சொல்படி, தான் ஓரங்கட்டிய மூவரையும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் மீ்ண்டும் அவர் கட்சியில் சேர்த்து கொள்வாரா? அல்லது மூவரின் வரிசையில் பாஜகவையும் எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டுவாரா என்ற கேள்வி அரசியல் அரங்கிலும் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
லிஸ்டில் முதல் ஆளான டிடிவி

ஜெயலலிதா மறைவுக்கு பின், 2017 ஆம் ஆண்டில் சொத்துக் குவிப்பு வழக்கில் வெளியான தீர்ப்பின்படி குற்றவாளியான சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டது. அப்போது அவர் ஆட்சிக்கு இபிஎஸ், கட்சிக்கு டிடிவி தினகரன் என்று கைக்காட்டி விட்டு சென்றார். அதே நேரத்தில் முதல்வர் பதிவியிலிருந்து ராஜினாமா செய்த ஓபிஎஸ் இந்த குரூப்க்கு எதிராக தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்,

இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதிக் கேட்டு இவ்வாறு தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஓபிஎஸ், திடீரென பாஜகவின் சொல்படி, இபிஎஸ் உடன் கைக்கோர்க்கவே அதிமுகவி்ல் அடுத்தடுத்து அதிரடி காட்சிகள் அரங்கேறின. டிடிவி ஓரங்கட்டப்பட்டார்; கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.அதன்படி ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஆனார். இபிஎஸ் முதல்வர் பதவியுடன் இணை ஒருங்கிணைப்பாளர் ஆனார்.

இதேபோன்று சட்டப்பேரவையில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணியின் 11 எம்எல்ஏ பிற்பாடு இபிஎஸ் அணியுடன் ஒன்றிணைந்தனர். ஆனால், அப்போது டிடிவியின் அறிவுறுத்தலின்படி இபிஎஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக வாக்களித்து, பின்னர் அதிருப்தி எம்எல்ஏக்களாக உருவான 18 எம்எல்ஏக்கள் தகுதி நீ்க்கம் செய்யப்பட்டனர். அந்த வகையில் பதவி பிரச்சனையில் முதல் ஆளாய் டிடிவி தினகரன் ஓரங்கட்டப்பட்டார்.

விரட்டியடிக்கப்பட்ட  சசிகலா

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியி்ல் இருந்து ஓரங்கட்டப்பட்ட டிடிவி தினகரன், அமமுக என்ற தனிக்கட்சியை ஆரம்பித்து, அடுத்து நடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த  2021 ஆம் ஆண்டு ஜனவரியில் தண்டனை முடிந்து சசிகலா சிறையிலிருந்து விடுதலை ஆகிறார் . அப்போது நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு ஒரு சில சில மாதங்களே இருந்த நிலையில் சசிகலா விடுதலையானது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இனிமேல் ஒட்டுமொத்த அதிமுகவும் சின்னம்மா பக்கம் தான் என்று அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் பில்டப் தந்த அளவுக்கு அப்போது எதுவும் நடக்கவில்லை. அந்த நேரத்தில் இபிஎஸ் தரப்பு எக்காரணம் கொண்டும் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இதனையடுத்து அரசியலில் இருந்து ஓதுங்குவதாக ஒரேயொரு அறிக்கையை கொடுத்துவிட்டு ஆஃப் ஆன சசிகலா அடுத்து ஆன்மிக சுற்றுப் பயணம் சென்றுவிட்டார்.

அதிமுகவில் அவருக்கு ஒருபோதும் இனி இடமில்லை என்பதுதான் சசிகலாவின் விடுதலைக்கு முன்பும் ,பின்பும் இபிஎஸ் தரப்பின் ஒற்றை நிலைப்பாடாக இருந்து வருகிறது. அவர்களின் இந்த நிலைப்பாட்டை தாண்டி சசிகலாவால் இன்றைக்கும் எதுவும் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். இவ்வாறாக டிடிவியை தொடர்ந்து சசிகலாவையும் கட்சியிலிருந்து இபிஎஸ் விரட்டியடித்தார்.

டிடிவி, சசிகலா வரிசையில் ஓபிஎஸ்

இப்படி டிடிவி, சசிகலா என இருவரையும் கொஞ்சம், கொஞ்சமாக ஓரங்கட்டிய இபிஎஸ் தரப்பு, சில மாதங்களுக்கு முன் ஒற்றை தலைமை கோரிக்கையை எழுப்பி, கடைசியில் ஓபிஎஸ்ஸையும் ஓரங்கட்டும் வேலையில் இறங்கியது.கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே ஓபிஎஸ் கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயல்பட்டு வந்தார்.குறிப்பாக தேர்தல் பிரசாரத்தின்போது அதிமுக கடைசி நேரத்தில் கொண்டு வந்த 10.5 வன்னியர் இட ஒதுக்கீட்டை தவறு என கட்சியின் முடிவுக்கு எதிராக செயல்பட்டார்.

இதனைத்தொடர்ந்து தேர்தல் முடிவுகளும் அவருக்கு சாதகமாக அமையவில்லை.வட மாவட்டங்களில் அதிமுக பெற்ற அளவுக்கு தென் மாவட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை அவரால் பெற முடியவில்லை. இதனால் இபிஎஸ் தரப்புக்கு பலம் கூடியது. இதனைத்தொடர்ந்து ஆளும் திமுகவை பாராட்டுவது, அக்கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நட்பு பாராட்டுவது என திமுகவுக்கு நெருக்கமாக நட்பு பாராட்டியது இபிஎஸ் தரப்பை கொந்தளிக்க செய்தது.

அடுத்து நடந்த மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வில் இபிஎஸ் தரப்பில் சிவி சண்முகம், ஜெயக்குமார் அல்லது செம்மலை உள்ளிட்டவர்களை முடிவு செய்ய ஓபிஎஸ் தனது ஆதரவாளர் ஒருவருக்கு வாய்ப்பு வேண்டும் என கெடுபிடி செய்தார். இறுதியில் அவரின் ஆதரவாளருக்கு சீட்டையும் பெற்றுக் கொடுத்தார். ஏற்கனவே கொந்தளிப்பில் இருந்த இபிஎஸ் தரப்பு மேலும் கோபமடைய ஜெயக்குமார் மூலமாக ஒற்றைத்தலைமை கோரிக்கை மூலமாக பிரச்னையை கிளப்பி ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதன் விளைவாக தற்போது இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு இருந்தாலும், கட்சியின் பொதுக்குழுவை நடத்தி, அதில் அதிமுகவின் இடைக்கால  பொதுச் செயலாளராகவும் இபிஎஸ் உயர்ந்துவிட்டார்.  அந்தவகையில் இன்றைய தேதியில் அரசியல்ரீதியாக அதிமுவில் இருந்து ஓபிஎஸ்ஸையும் கிட்டதட்ட ஓரங்கட்டிவிட்டார் என்று தான் கருத வேண்டும்.

கட்சியில் பெரும்பாலோனோர் இபிஎஸ் அணியில் இருந்தாலும் ஓபிஎஸ்  தரப்பு நீதிமன்றம் மூலம் கட்சியை கைப்பற்ற முயற்சித்து வருகிறது. இது எந்த அளவுக்கு அவருக்கு பயனளிக்கும் என்று தெரியாது. ஆனால் இதை வைத்து பாஜக அரசியல் செய்ய அவர் பெரிதும் உதவியாக இருக்கிறார்.

இபிஎஸ் முன்னுள்ள மிகப்பெரிய சவால்

டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் என ஒவ்வொருவராக இபிஎஸ் ஓரங்கட்டுவதால் இபிஎஸ் அரசியல் சாணக்கியத்தனம் மிக்கவர் என்று அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இபிஎஸ் -ஓபிஎஸ் இடையே நடைபெற்று வரும் அதிமுக தலைமைக்கான இந்த உட்கட்சி பிரச்னையை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது என்பதை அக்கட்சியினர் முதல் அனைவரும் அறிவர்.

அதிமுக உட்கட்சி பிரச்சனையில் பாஜக ஒருபோதும் தலையிடாது என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தாலும், இதில் பாஜக மேலிடத்தின் பார்வை சுத்தமாக இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதை உறுதி செய்யும் வகையில் தான் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என மாறி மாறி பாஜக தலைமையை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் இணைந்திருந்த போது பாஜக மேலிடத்தின் தயவு இருந்ததால் தான் டிடிவி, சசிகலா உள்ளிட்டோரை அதிமுகவிலிருந்து தைரியமாக ஓரங்கட்டினார் இபிஎஸ். அதே வேகத்தில் ஓபிஎஸ்ஸையும் கட்சியை விட்டு வெளியேற்றிவிடலாம் என்று எண்ணிய இபிஎஸ்ஸுக்கு டெல்லியில் இருந்து தற்போது வரை ரெட் சிக்னலே கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இதை கிரீன் சிக்னலாக மாற்ற முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமி அமித் ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய புள்ளிகளை மாறி மாறி சந்தித்து வருகிறார். எல்லோரும் ஒன்றாக இருங்க என ஆலோசனை கூறிய பாஜகவின் விருப்பத்துக்கு மாறாக, ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டும் முயற்சியில் தொடர்ந்து இருந்துவரும் இபிஎஸ், அதில் வெற்றிப் பெறுவதுதான் தற்போது அவர் முன்னுள்ள மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முடிந்த வரை பாஜக மேலிடத்தை எடப்பாடி பழனிசாமி சமாதானம் செய்ய முயற்சிப்பார். முடியாத நிலையில் ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டுவதுடன் பாஜகவையும் அந்த லிஸ்டில் சேர்க்கும் முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாகவே அரசியல் ஆர்வலர்கள் கணிக்கின்றனர்.

Exit mobile version