பெண்களுக்கு தங்களது வாழ்நாளில் எல்லாவற்றையும் விட முக்கியமான காலம் என்றால் கர்ப்ப காலம் தான், கர்ப்பகாலத்தில் பெண்கள் அவர்களது குழந்தையை எப்படி கவனமுடன் வயிற்றுக்குள் பாதுகாத்து கொண்டு இருப்பார்களோ அதைவிட அவர்களது தங்களது உடல்நிலையையும் கவனித்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும். கர்ப்ப காலத்தில் நல்ல ஆரோக்கியமான உணவை உண்பதோடு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க தினமும் 8-12 கிளாஸ் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள் இந்த முக்கியமான நேரத்தில் உட்கொள்ளக் கூடாத சில உணவுகள் மற்றும் பானங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் க்ரீன் டீ, பொதுவாக நாம் க்ரீன் டீ ஆரோக்கியம் என்று கருதுவோம் ஆனால் அதனை கர்ப்ப காலத்தில் குடிப்பது பேராபத்தை ஏற்படுத்தும். கிரீன் டீயில் பாலிஃபீனால்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மிக அதிக அளவில் உள்ளது, இவை நமக்கு உதவி செய்தாலும், மறுபுறம் அதிகமாக உட்கொண்டால் டிஎன்ஏவை சேதப்படுத்தும்.
கிரீன் டீயில் காஃபின் கூறுகள் இருப்பதால், நஞ்சுக்கொடி வழியாக குழந்தையின் இரத்த ஓட்டத்திற்கு தீங்கு விளைவிக்கிறது மற்றும் இது குழந்தையின் டிஎன்ஏ செல்களுக்கு தீங்கு விளைவித்து கருச்சிதைவுக்கு வழிவகுக்கிறது. கர்ப்ப காலத்தில் கிரீன் டீயை அதிக அளவில் உட்கொள்வது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். இது குழந்தையின் உறுப்புகளை சரியாக வளர விடாது மற்றும் முன்கூட்டிய குழந்தை பிறப்புக்கும் வழிவகுக்கும். இதனை அதிகமாக குடித்தால் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரித்து குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும். இதுதவிர கர்ப்ப காலத்தில் க்ரீன் டீ குடிப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்படும், இந்த நேரத்தில் உங்கள் உடல் நீரேற்றமாக இருக்க வேண்டும் என்பதால் நீங்கள் க்ரீன் டீயை தவிர்ப்பது நல்லது.