தனியார் கல்லூரியில் வெடித்தது வெடிகுண்டா? விசாரணையில் வெளிவந்த உண்மை!!

0
110

தனியார் கல்லூரியில் வெடித்தது வெடிகுண்டா? விசாரணையில் வெளிவந்த உண்மை!!

வேளச்சேரியில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர் ஒருவர் சக மாணவர்களை நோக்கி நாட்டு வெடிகுண்டு வீசினார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.இதனை தொடர்ந்து தனியார் கல்லூரி வளாகத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது கிண்டி காவல்துறை விசாரணையில் தற்பொழுது வெளிவந்துள்ளது.

சென்னை வேளச்சேரியில் குருநானக் என்ற தனியார் கல்லூரி இயங்கி வருகின்றது.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் மூன்றாம் ஆண்டு பி.ஏ பொருளாதாரம் படித்து வரும் தனுஷ் என்ற மாணவருக்கும்,பி.ஏ டிபன்ஸ் படித்து வரும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் பி.ஏ டிபன்ஸ் மாணவர்கள் தனுஷைத் தாக்கியுள்ளனர்.இந்த சம்பவம் கடந்த வெள்ளி அன்று நடைபெற்று இருக்கின்றது.

இதனால் மாணவன் தனுஷ்க்கு சக மாணவர்கள் முன்னிலையில் பெருத்த அவமானம் ஏற்பட்டு இருக்கின்றது.இந்நிலையில் தன்னை தாக்கியவர்கள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த மாணவன் தனுஷ் வார விடுமுறை முடிந்து நேற்று கல்லூரி வந்துள்ளார்.அப்போது தன்னை தாக்கிய மாணவர்களுக்கு பாடம் புகட்டுவதாக எண்ணி அவர்களை நோக்கி பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளை வீசி இருக்கின்றார்.இதனை சற்றும் எதிர்பார்க்காத கல்லூரியில் படிக்கும் மற்ற மாணவர்கள் நாட்டு வெடிகுண்டு தான் வீசப்பட்டுள்ளது என்று நினைத்து அலறி அடித்திக்கொண்டு கல்லூரியை விட்டு வெளியேறினர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக கிண்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கல்லூரிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் தகராறில் ஈடுபட்டதாக கருதப்படும் சுமார் 18 மாணவர்களை பிடித்து விசாரித்தனர்.இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் வெடித்தது நாட்டு வெடிகுண்டு இல்லை சவ ஊர்வலத்தில் வெடிக்க பயன்படும் பட்டாசு என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த தனியார் கல்லூரியில் அவ்வப்போது மாணவர்கள் குழுக்களாக பிரிந்து தாக்கி கொள்வதும் கல்லூரி பேராசிரியர்கள் பஞ்சாயத்து செய்து பிரச்சனைகளை தீர்த்து வைப்பதும் அடிக்கடி நிகழ்ந்து வரும் செயலாக இருக்கின்றது என்று சிலர் தெரிவித்து உள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற நாங்குநேரி சம்பவம்,ரூட்டு தல பிரச்சனை தற்பொழுது குருநானக் கல்லூரியில் அரங்கேறியுள்ள பட்டாசு வெடி என்று மாணவர்கள் வன்முறையில் இறங்கும் சம்பவம் அதிகரித்து வருகின்றது.இது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதென்று பலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.