இரண்டு தக்காளியை பயன்படுத்தியது குற்றமா?? கணவருடன் கோபித்து வீட்டை விட்டு வெளியேறிய மனைவி!!
சமையல் செய்வதற்கு கணவர் தக்காளியை பயன்படுத்தியதால் மனைவி கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
நாடு முழுவதும் தக்காளியின் விலை தாறுமாறாக அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. இந்த தக்காளியை பாதுகாக்க வியாபாரிகள் இன்சூரன்ஸ் எடுத்து வைத்தல், பவுன்சர்களை நியமித்தல் போன்ற செயல்களை செய்து தக்காளியை தங்கம் போல மிகவும் பாதுகாப்பாக விற்பனை செய்து வருகின்றனர்.
தக்காளி குறைந்தபட்சம் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு தக்காளியின் விலையை கட்டுப்படுத்தி மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடிந்த முயற்சிகளை செய்து வருகின்றது. தக்காளி விலை அதிகரிப்பது போலவே காய்கறிகளின் விலையும் சம அளவில் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஷாஹ்டால் மாவட்டத்தில் கணவர் சமையலுக்கு தக்காளியை பயன்படுத்தியதால் அவருடன் சண்டையிட்டுக் கொண்டு மனைவி குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷாஹ்டால் மாவட்டத்தில் சஞ்சீவ் பர்மன் என்பவர் சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சஞ்சீவ் பர்மன் அவர்கள் மனைவிக்கு தெரியாமல் இரண்டு தக்காளியை சமையலுக்கு பயன்படுத்தியுள்ளார்.
இதை அறிந்த மனைவி என்னை கேட்காமல் எப்படி இரண்டு தக்காளியை நீ சமையலுக்கு பயன்படுத்துவாய் என்று கேட்டு மனைவி கோபமடைந்துள்ளார். இதையடுத்து கணவருக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த மனைவி தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து கணவர் சஞ்சீவ் பர்மன் அவர்கள் மனைவியையும் மகளையும் தேடி அலைந்துள்ளார். எங்கு தேடியும் மனைவி மகள் இருவரும் கிடைக்காததால் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினரும் மனைவி மகள் இருவரையும் தேடி கண்டுபிடித்து தருவதாக கூறி சஞ்சீவ் பர்மனை அனுப்பி வைத்தனர்.