தமிழ்நாட்டில் ஆங்காங்கே சில பகுதிகளில் இந்த சிவப்பு பாதரசத்திற்காக பழைய டிவி மற்றும் ரேடியோக்களை விலைக்கு வாங்கி அந்தப் பாதரசத்தை எடுப்பதற்காக முயற்சித்து வருகிறார்கள்.
அண்மையில் கூட மதுரையில் பழைய டிவி பெட்டிகளை உடைத்து சிவப்பு பாதரசம் எடுப்பதற்காக முயற்சித்துள்ளனர்.
இந்த சம்பவங்களால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வெள்ளை பாதரசம் தான் உண்மையானது. சிவப்பு பாதரசம் என்பது வெறும் வேதிப்பொருளாக இருப்பதில்லை.
அதை பற்றிய கதைகள் ஆங்காங்கே கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது. சிவப்பு பாதரசம் என்பது அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் பொருள், பூண்டை கண்டால் சிவப்பு பாதரசம் விலகி ஓடும், தங்கத்தை கொண்டால் ஒட்டிக்கொள்ளும், தீராத நோய்கள் எல்லாம் தீர்க்கும் திறன் கொண்டது, சிவப்பு பாதரசத்தை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகும் என்பது போன்ற கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது.
பழைய டிவி மற்றும் ரேடியோக்களில் தான் அது கிடைக்கும் என்று நம்பப்பட்டு வருகிறது. இது அடுத்த கட்ட லெவலுக்கு சென்றுள்ளது. இந்த சிவப்பு பாதரசம் எனும் மோசடியை நம்பி மதுரையில் 30க்கும் மேற்பட்ட பழைய டிவிகளை உடைத்துப் பார்த்துவிட்டு நிலையூர் கண்மாயில் வீசியுள்ளனர்.
மண்ணுளிப்பாம்பு, இருடியம், வரிசையில் தற்போது சிவப்பு பாதரசம் இடம் பிடித்துள்ளது. சிவப்பு பாதரசம் என்ற பெயரில் ஏதோ ஒரு பொருளைக் காட்டியும், அந்த சிவப்பு பாதரசம் பற்றிய வீடியோக்களை காட்டியும் மக்களை நம்ப வைத்து பெரும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் 3 கோடி ரூபாய் கொடுத்தால், 1 மில்லி இந்த சிவப்பு பாதரசத்தினை தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட முயன்ற மோசடி கும்பல் சிக்கியது குறிப்பிடத்தக்கதாகும். எனவே இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.