அண்ணாமலையின் தலை தப்புமா? டெல்லி மேலிடத்தின் முடிவு என்ன?
தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
தமிழக பாஜகவின் புதிய தலைவராக கர்நாடக மாநிலத்தின் உயர் காவல்துறை அதிகாரியாக இருந்தவரும், தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை தமிழக பாஜகவின் புதிய தலைவராக டெல்லி மேலிடத்தால் நியமிக்கப்பட்டார்.
அண்ணாமலை தமிழகத்தின் பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட நாள் முதல் பெரும் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தது. கட்சியின் மூத்த தலைவர்களை அண்ணாமலை மதிப்பதில்லை எனவும், அவருக்கு ஆதரவாக செயல்படுபவர்களுக்கு மட்டுமே கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் பாஜகவின் தமிழக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர் புகார் கூறி வந்தனர்.
மேலும் அண்ணாமலையின் கடும் நடவடிக்கைகளினால் கட்சியில் பல மூத்த தலைவர்கள், பெண் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என பலர் திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளுக்கு தாவினர், இதனிடையே நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பின்பு அதிமுக மற்றும் அண்ணாமலை இடையே மோதல் போக்கு வெடிக்க ஆரம்பித்தது.
அண்ணாமலையின் நம்பிக்கைக்குரிய நிர்வாகிகள் பலர் அதிமுகவில் இணைந்தனர். இதனால் கடும் கோபம் கொண்ட அண்ணாமலை பாஜகவில் இருக்கும் நிர்வாகிகளை வைத்து தான் கட்சி நடத்த வேண்டிய நிலை திராவிட கட்சிகளுக்கு உள்ளது என கூறியது அதிமுக மற்றும் பாஜக இடையே கருத்து மோதல் போக்கினை உருவாக்கியது. இந்த நிலையில் கடந்த வாரம் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தன்னுடைய தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறியது தமிழகத்தில் மட்டுமல்ல டெல்லி பாஜகவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து நேற்று சென்னை வந்து மத்திய அமைச்சரும், தமிழக பொறுப்பாளருமான பியூஸ்கோயலை விமான நிலையத்தில் வரவேற்க செல்லாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாமலை தன்னை ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோருடன் ஒப்பிட்டு பேசியது பாஜக டெல்லி தலைமையை அதிர்ச்சி அடைய வைத்தது. இது போன்ற தொடர் புகார்கள் அண்ணாமலை மீது குவிந்து வரும் நிலையில், தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் டெல்லி சென்றுள்ளார் அண்ணாமலை.
அண்ணாமலை மீது பாஜகவினரால் கூறப்பட்ட புகார் மற்றும் தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து, பேசுவதற்கு சென்றுள்ளதாகவும், இதனிடையே சமிபத்தில் தனக்கு நெருக்கமான ஆட்களிடம் தன்னை பற்றி சர்வே எடுக்க கூறியதில், தனக்கென்று ஒரு தனி செல்வாக்கு தமிழக மக்களிடையே உள்ளதால் அதனை தனக்கு நெருக்கமான நபர்களிடம் கூறியதும் டெல்லி மேலிடத்திற்கு பெரும் தலைவலியை உருவாக்கி உள்ளதாகவும், இதன் காரணமாக டெல்லி சென்றுள்ள அண்ணாமலையின் தமிழக தலைவர் பதவி தப்புமா அல்லது புதிய தலை பொறுப்பேற்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளதாக தமிழக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.