Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்குவது தொழிலாளர் நலத்துறையா அல்லது முதலாளி நலத்துறையா? – சீமான் ஆவேசம் 

Seeman

Seeman

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்குவது தொழிலாளர் நலத்துறையா அல்லது முதலாளி நலத்துறையா? – சீமான் ஆவேசம்

யமஹா நிறுவனத்தின் தொழிலாளர் உரிமை பறிப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையும் துணைபோவது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்குவது தொழிலாளர் நலத்துறையா அல்லது முதலாளி நலத்துறையா?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “யமகா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நெடுநாட்களாகப் போராடிவரும் நிலையில், அதனைத் தரமறுக்கும் யமகா நிர்வாகத்தின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும். தொழிலாளர்களின் ஊதிய உரிமையைப் பெற்றுத்தராமல் யமகா நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்படும் தமிழ்நாடு அரசின் முதலாளித்துவப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

சென்னையில் அமைந்திருக்கும் பன்னாட்டு இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமகா தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களால் ஊழியர்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடர் போராட்டம் நடத்தி, தங்களது அயராத முயற்சியால் இந்திய யமஹா மோட்டார் தொழிற்சங்கத்தை (IYMTS) அமைத்தனர். யமகா நிறுவனமும் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நீண்டகால ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது ஒப்பந்த விதிகளை மீறும் வகையில் தொழிற்சங்கத்துடன் அடுத்த மூன்றாண்டுக் கால ஊதிய ஒப்பந்தத்தைப் பேச மறுத்துவருகிறது.

அதுமட்டுமின்றி, பெரும்பான்மை தொழிலாளர்களைக் கொண்ட IYMTS தொழிற்சங்கத்திற்குப் போட்டியாக, தொழிலாளர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் தமக்கு ஆதரவான புதிய தொழிற்சங்கத்தை உருவாக்கி அதனுடன் பேச்சுவார்த்தையையும் தொடங்கியுள்ளது யமகா நிறுவனம். இது முழுக்க முழுக்கத் தொழிலாளர் விரோதப்போக்காகும். மேலும், தொழிற்சங்கம் தொடர்பான வழக்குகள் தொழிலாளர் நலத்துறையிலும், நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கும் நிலையில், தமக்கு ஆதரவான மிகக்குறைந்த ஊழியர்களைக் கொண்ட தொழிற்சங்கத்துடன் யமகா நிறுவனம் ஊதிய பேச்சுவார்த்தையை நடத்திவருவது சட்டத்திற்கும் புறம்பானதாகும்.

யமகா நிறுவனத்தின் இத்தகைய தொழிலாளர் உரிமை பறிப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையும் துணைபோவது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. புதிய தொழிற்சங்கம் அமைக்கத் தேவையான ஆவணங்கள் மற்றும் ஊழியர்களின் ஆதரவு இருக்கிறதா என்பதை உறுதிபடுத்தமால் அவசர அவசரமாக நிறுவன ஆதரவு புதிய தொழிற்சங்கத்திற்கு தொழிலாளர் நலத்துறை அனுமதியளித்தது தமிழ்நாடு அரசின் கீழ் இயங்குவது தொழிலாளர் நலத்துறையா அல்லது முதலாளி நலத்துறையா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.

ஆட்சி அதிகார பலத்தை பயன்படுத்தி தொழிலாளர் சகோதரர்களுக்கு அவர்களின் வாழ்வாதார உரிமையையைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய திமுக அரசு, பன்னாட்டு நிறுவனத்தின் முதலாளித்துவக் கொடும் மனப்பான்மைக்கு ஆதரவாகத் துணைபோவது சொந்த மண்ணின் மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும். இத்தகைய அநீதிகளுக்கு எதிராக யமகா தொழிலாளர்கள் அமைதியான முறையில் முன்னெடுக்கும் உள்ளிருப்புப் அறவழிப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிப்பதோடு, கோரிக்கைகள் வெல்லும்வரை தோள்கொடுத்து துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்.

ஆகவே, தொழிலாளர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற IYMTS தொழிற்சங்கத்தை யமகா நிறுவனம் புறக்கணிப்பதைக் கைவிடச் செய்து, அவர்களின் வாழ்வாதார உரிமையான ஊதிய உயர்வினைப் பெற்றுத்தர தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Exit mobile version