Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சம்பாதிக்கும் பணம் அனாவசியமாக செலவாகிறதா..?? பணம் விரயமாவதை குறைக்க இந்த வழிகளையும், வழிபாட்டையும் பின்பற்றுங்கள்..!!

இந்த உலகில் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இவ்வாறு கஷ்டப்பட்டு உழைத்தாலும் கூட அந்த பணத்தை மிச்சம் செய்து நமது வீட்டில் வைப்பது என்பதும் கஷ்டமான ஒரு விஷயம். ஒருவேளை சேமிப்பிற்காக என நமது வீட்டில் வைத்தாலும், ஏதேனும் ஒரு தேவைகள் வந்தால் அதிலிருந்து தான் எடுக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறதே தவிர பணத்தை சேமிக்க முடிவதில்லை.

இவ்வாறு பணம் வீணாவது சுபச் செலவுகளுக்காக என இருந்தாலும் கூட பரவாயில்லை, ஆனால் வீண் செலவுகள் ஆகத் தான் அதிகம் ஆகும். அல்லது நமது பணம் எங்கேயும் ஒரு இடத்தில் போய் மாட்டிக்கொள்ளும். ஒரு பொருளானது எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் தான் இருக்க வேண்டும்.

வங்கிகளில் எவ்வாறு பணம் ஒரு இடத்திலும், நகைகளை ஒரு இடத்திலும் என பாதுகாப்பாக வைத்திருக்கிறார்களோ, அவ்வாறு தான் நமது வீடுகளிலும் வைத்திருக்க வேண்டும். அதாவது நமது வீட்டில் பணத்தை அங்கங்கே என ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு மூலையிலும் என வைத்து விடுகிறோம் அவ்வாறு வைக்க கூடாது. இரண்டு அல்லது மூன்று பீரோக்கள் அல்லது பெட்டிகள் இருந்தால் அனைத்து பெட்டிகளிலும் பீரோக்களிலும் வைப்பதும், சமையலறை மற்றும் படுக்கை அறையில் அங்கங்கே வைப்பதும் கூடாது.

அதாவது பணம் வைப்பதற்கு என ஒரு சில இடங்கள் உள்ளது. அந்த இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். கண்ட இடங்களில் பணத்தை வைத்து விடக்கூடாது. சமையலறை அஞ்சறைப் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் அது மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய இடம். அதேபோன்று பூஜை அறையில் கடவுளுக்காக என வைத்துக் கொள்ளலாம்.

பணம் என்பது மகாலட்சுமிக்கு சமமான ஒன்று. எனவே அந்த பணத்தை சுத்தமான இடத்திலும், வாசனை நிறைந்த இடத்திலும் வைக்க வேண்டும். அதேபோன்று பணமானது வீண் விரயம் ஆகாமலும், பணம் சேர்வதற்கும் என ஒரு பரிகாரம் உள்ளது. அதனை செய்யும் பொழுது கண்டிப்பாக நமது வீட்டில் பணம் தங்கும்.

ஒரு சிவப்பு நிற துணியில் பெருமாள் வழிபாட்டில் கொடுத்த துளசி அல்லது நமது வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்ட துளசியினை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பச்சை கற்பூரம் சிறிதளவு, கோவில்களில் ஹோமங்கள் வளர்த்ததில் இருந்து எடுக்கப்பட்ட காசுகள், மூன்று அல்லது நாலு ஏலக்காய் ஆகியவற்றையும் அந்த சிவப்பு நிற துணியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஹோம காசுகள் என்பதை நமக்கு ராசியாக இருக்கக்கூடிய எண்ணிக்கையில் வைத்துக் கொள்வது நல்லது. மேலும் இதனுடன் பெருமாள் கோவில் அட்சதையையும் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தையும் அந்த சிவப்பு நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு வெள்ளிக்கிழமை அன்று செய்வது மிகவும் சிறப்பு. எனவே வெள்ளிக்கிழமை அன்று நமது பூஜை அறையில் இந்த மூட்டையை வைத்து, மகாலட்சுமி தாயிடம் ‘எனது வீட்டில் சுபச் செலவுகளாகவே ஆக வேண்டும். அசுப செலவுகள் ஆகக்கூடாது’ என்று மனதார வேண்டிக் கொண்டு அந்த மூட்டைக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், ஆகியவற்றை வைக்க வேண்டும்.

அதன் பிறகு அந்த மூட்டையை நாம் பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்துக் கொள்ளலாம். இந்த பணம் வைக்கக்கூடிய இடத்தை திறந்தவுடன் அந்த வாசனை என்பது இருக்க வேண்டும். அந்த வாசனையானது குறைந்துவிட்டால், மீண்டும் புதிய பொருட்களை சேர்த்து வெள்ளிக்கிழமை நாட்களில் நமது பணம் வைக்கக்கூடிய இடத்தில் மீண்டும் வைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்யும் பொழுது நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்க கூடிய பணமானது வீண் செலவுகளாக ஆகாமல், சுபச் செலவுகள் ஆகவே ஆகும். மேலும் பணமானது நமது வீட்டில் நிலைத்து இருக்கும். இந்த பணப்பெட்டி அல்லது பீரோவை குபேரனின் மூலையான குபேர மூலையில், வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும்.

Exit mobile version