மகாராஜா ரஞ்சித் சிங்கின் இளைய மகனான துலீப் சிங் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய துணை கண்டத்தின் வடமேற்கு பகுதியை ஆட்சி செய்தார். துலீப் சிங்தான், பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் சீக்கிய பேரரசின் கடைசி மன்னராக இருந்தார். இவர் ஆட்சியை பிரிட்டிஷ் கைப்பற்றியதால் துலீப் சிங் இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு 1866-ம் ஆண்டு இளவரசர் விக்டர் ஆல்பர்ட் ஜே துலீப் சிங் பிறந்தார். அழகான மற்றும் துணிச்சலான இளவரசராக அறியப்பட்ட விக்டர் 1898-ம் ஆண்டு ஆங்கிலேய சமுதாயத்தைச் சேர்ந்த லேடி அன்னே கோவென்ட்ரியை கலப்பு திருமணம் செய்து கொண்டார்.
1902-ம் ஆண்டில் அவர் திவாலாக அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து லண்டனில் உள்ள அவரது ஆடம்பர மாளிகையை அரசு கைப்பற்றிய நிலையில் இறுதியில் அது தனியார் கைக்கு சென்றது. கடந்த 2010-ம் ஆண்டு இந்த மாளிகை புதுப்பிக்கப்பட்டு நவீன மயமாக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மாளிகை அண்மையில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. பலரும் இந்த மாளிகையை வாங்குவதற்கு போட்டா போட்டி போட்டனர். இறுதியில் இந்த மாளிகை தற்போது 15.5 மில்லியன் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.152 கோடி) விற்பனையாகியுள்ளது.