உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 48 ஆயிரத்து 590 பேருக்கும், அமெரிக்காவில் 38 ஆயிரத்து 199 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 81 லட்சத்தை கடந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது முதல் சீனாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. குறிப்பாக வுகான் நகரில் உள்ள பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன. கொரோனா தற்போது கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதால் வுகான் நகரிலும் தொடக்க நிலை, நடுநிலை உள்பட அனைத்து பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.