ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!

0
140

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப், பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஹிஜாப் விவகாரத்தால் கர்நாடக மாநிலம் முழுவதும் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டுக்கு தடை விதிக்கக் கோரி அந்த கல்லூரி இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இஸ்லாமிய மாணவிகள் தாக்கல் செய்த இந்த மனுவின் மீதான விசாரணையில் இறுதி தீர்ப்பு வரும்வரை பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் அனைவரும் மதம் சார்ந்த ஆடைகளை அணிந்து செல்ல இடைக்கால தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விரிவான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், நேற்று ஹிஜாப் தொடர்பான வழக்கில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மதம் சார்ந்த ஆடைகளை அணிந்து வர விதிக்கப்பட்ட தடை உத்தரவு செல்லும். எனவே இஸ்லாமிய மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை தொடரும் எனக் கூறி ஹிஜாப் தொடர்பான இஸ்லாமிய மாணவிகள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, ஹோலி பண்டிகைக்கு பிறகு ஹிஜாப் வழக்கின் மீதான விசாரணையை மேற்கொள்வது குறித்து பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் நாளை (மார்ச் 17-ந் தேதி) போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.