தக்காளி கிலோ ரூ.200 க்கு விற்றாலும் பரவாயில்லை.. எங்களுக்கு ரூ.80 போதும்- விவசாய சகோதரர்கள்!!
நாளுக்கு நாள் தக்காளி விலையேற்றம் கண்டு வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாய சகோதரர்கள் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்வதால் உள்ளூர் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் குந்தா கிராமத்தை சேர்ந்த ராமன் மற்றும் புட்டசாமி என்ற சகோதரர்கள் பல வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்கள் வழக்கம் போல் பயிரிடும் மலை காய்கறிகளான பீட்ரூட்,கேரட்,முட்டைகோஸ்,மலை பூண்டு போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளனர்.இந்நிலையில் சற்று வித்தியாசமாக யோசித்து நாட்டு தக்காளி பயிரிடலாம் என்று முடிவெடுத்து அதற்காக 1000 நாற்றுகளை மைசூரில் இருந்து வாங்கி வந்து 50 சென்ட் நிலத்தில் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக நன்கு வளர்ந்து வந்த தக்காளி செடிகளில் கிட்டத்தட்ட 400 செடிகள் மாய்ந்துவிட்டன.இந்நிலையில் மீதமுள்ள செடிகளை கடுமையாக போராடி விளைச்சலுக்கு கொண்டு வந்துள்ளனர்.மேலும் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து தக்காளி கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரை விற்கப்பட்டு வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இதனால் விவசாய சகோதரர்கள் இருவரும் தங்கள் குந்தா கிராம மக்கள் அவதியடைய கூடாதென்று முடிவெடுத்து தக்காளி கிலோ ரூ.80 க்கு விற்று வருவதோடு அங்குள்ள சிறு கடைகளுக்கும் கொடுத்து வருகின்றனர்.இதனை அறிந்த வெளியூர் வியாபாரிகள் தக்காளி வாங்குவதற்காக இவர்களை அணுகியுள்ளனர்.ஆனால் அவர்களோ தங்கள் குந்தா கிராம மக்களுக்கு மட்டுமே தக்காளி விற்பனை செய்வோம் என்று தெரிவித்து விட்டனர்.மேலும் இதுவரை 1000 கிலோ வரை சாகுபடி செய்துள்ள இவர்கள் தக்காளி விலை கிலோ ரூ.200 க்கு விற்றாலும் பரவாயில்லை எங்களுக்கு ரூ.80 கிடைத்தால் போதும்.அதுவே தங்களுக்கு நல்ல லாபம் தந்து கொண்டிருக்கின்றது என்று பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.மேலும் 20 ஆண்டுகளுக்கு முன் தக்காளி பயிரிட்டோம் நல்ல விளைச்சல் கிடைத்ததால் மீண்டும் தொடர்ந்து பயிர் செய்தோம். ஆனால் காலநிலை மாற்றத்தால் தக்காளி எங்களுக்கு கை கொடுக்கவில்லை என்பதால் பயிர் செய்வதை நிறுத்திவிட்டோம்.இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இதை பயிரிட்டு நல்ல லாபம் பார்த்து வருகின்றோம் என்று கூறினார்கள்.
இந்நிலையில் ராமன் மற்றும் புட்டசாமி அவர்களின் இந்த செயலை உள்ளூர் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.