இந்த செயல் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது தயவுசெய்து இதை செய்யுங்கள்! மாநில அரசுக்கு கோரிக்கை வைத்த பாஜக தலைமை!

0
109

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் நடைபெற்ற பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததுடன் உயிரிழந்தவர்களுக்கு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கி இருக்கிறார்.

அதோடு அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அத்துடன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்டத்தில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருக்கும் பட்டாசு கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

இந்த நிலையில், இதுதொடர்பாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பதாவது, பட்டாசு விபத்து மிகுந்த வேதனை தருகிறது எனவும், இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக நிவாரண நிதியாக பத்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அறிக்கையின் மூலமாக தெரிவித்திருக்கிறார். அதாவது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செல்வ கணபதி என்பவர் கடையின் மாடியில் தீபாவளி விற்பனைக்காக சேகரித்து வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து அருகில் இருந்த பேக்கரியில் கேஸ் சிலிண்டர் வெடித்ததன் காரணமாக, ஏற்பட்ட விபத்தில் 9ற்கும் அதிகமானோர் பலியான செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் அண்ணாமலை.

உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். தீபாவளி பண்டிகை காலம் என்ற காரணத்தால், பட்டாசு வணிகத்தில் வணிகர்கள் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான். அதேநேரம் பட்டாசுகளை சேமித்து வைப்பதும், வணிகத்தில் ஈடுபடுவதும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோள் ஆகும் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதை தகுந்த பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தால் மட்டுமே தவிர்க்க முடியும் என்பதை நாம் எல்லோரும் அறிந்து வைத்திருக்கின்றோம் என தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

ஆனாலும் இது போன்ற கவனம் இல்லாத செயலால் விபத்துகளும், உயிரிழப்புகளும், உண்டாவது அதிர்ச்சியையும், வேதனையையும், தருகின்றது. பட்டாசு வணிகத்தில் ஈடுபடுபவர்கள் தகுந்த பாதுகாப்பு முறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என மீண்டும், மீண்டும், கேட்டுக் கொள்கின்றேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண நிதியாக ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.