Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேப்பர் இல்லாமல் படிக்க இது ஒன்னும் எக்ஸாம் இல்ல – எடப்பாடி பழனிசாமி!!

#image_title

பேப்பர் இல்லாமல் படிக்க இது ஒன்னும் எக்ஸாம் இல்ல – எடப்பாடி பழனிசாமி!!

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்தில் அதிமுக உறுப்பினர் கே.பி.அன்பழகன் பேசிக்கொண்டிருந்த போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு , சட்டப்பேரவை தலைவராக பிடிஆர் பழனிவேல்ராஜன் இருந்த காலத்தில் பேப்பரை வைத்துகொண்டு பேச அனுமதிக்க மாட்டார். பேப்பரை பார்த்து படித்தால் நேரம் அதிகம் பிடிக்கும் என்பதால் பேப்பரை பார்க்காமல் படிக்க முயற்சி செய்யுங்கள் என கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் ஒருமுறை ஜோதியம்மாள் சட்டப்பேரவை தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்த போது குடியாத்தம் உறுப்பினர் துரைசாமியை பேப்பர் வைத்து படிக்க வேண்டாமென அறிவுறுத்தினார். அப்போது எழுந்த கருணாநிதி, குடியாத்தம் துரைசாமி சிறந்த பேச்சாளர், குறிப்பில்லாமல் மூன்று மணி நேரம் கூட பேசக்கூடியவர் என்பதால் அவரை தொடர்ந்து பேச அனுமதியுங்கள் என கூறினார். இப்போதெல்லாம் பெரும்பாலானோர் பேப்பர் பார்த்து தான் படிக்கிறார்கள் என ஆதங்கப்பட்டார்.

அவரை தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, குறிப்பு வைத்துக்கொண்டு பேசுவது தவறு என நான் சொல்லவில்லை. 4 பக்கங்களை ஒரு வரியில் பேசுவதை போல உறுப்பினர்கள் பேச முயற்சிக்க வேண்டும் என கூறினார்.

அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி, குறிப்பில்லாமல் பேசுவதற்கு இது ஒன்னும் எக்ஸாம் இல்ல. பொதுப்பணித்துறை முக்கியமான துறை என்பதால் அதில் ஏராளமான புள்ளி விவரங்கள் இருக்கும். தவறான தகவல் எதுவும் அவையில் பதிவாகி விடக்கூடாது என்பதற்காகவே குறிப்பெடுத்து பேசுகிறார்கள். அவரவர் அறிவுக்கு ஏற்றார் போல் தான் பேச முடியும். எல்லாரும் அறிவாளியாக இருக்க முடியாது என கூறினார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, பேப்பரை பார்க்காமல் பேசினால் தெளிவாக இருக்கும் என்பதாலும், சொல்ல வேண்டிய விசயத்தை விரைந்து சொல்ல முடியும் என்பதாலே கூறினேனே தவிர வேறு எதுவும் தவறாக சொல்லவில்லை என கூறி விவாதத்தை முடித்து வைத்தார்.

Exit mobile version