வருமான வரி சோதனை! சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் 12 கோடி ரூபாய் பறிமுதல்!

0
122

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஜெயப்பிரியா வித்யாலயா என்ற மிகப்பெரிய கல்வி நிறுவனம் இருக்கிறது. இந்த கல்வி நிறுவனம் மற்றும் ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர் ஜெய்சங்கர் கடந்த 2014ஆம் வருடம் தேமுதிக கட்சியின் சார்பாக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.

இந்த ஜெயப்பிரியா வித்யாலயா கல்வி நிறுவனம் கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிகப்பெரிய பிரபலமான கல்வி நிறுவனம். அந்த கல்வி நிறுவனத்தில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் அல்லாமல் அருகில் இருக்கக்கூடிய மாவட்டங்களிலும் இருந்து பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1985ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் நடந்து வருகிறது. தற்சமயம் தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் இருக்கின்றன. நெய்வேலி, விருதாச்சலம், கோயம்புத்தூர், சென்னை, நீலகிரி, உள்ளிட்ட நகரங்களில் இருக்கின்ற நிறுவனத்தின் கிளைகளில் கடந்த 16ஆம் தேதி வருமானவரித்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சூழ்நிலையில், நெய்வேலி உட்பட 30 இடங்களில் கடந்த 16-ஆம் தேதி நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின்போது அந்த நிறுவனத்தில் முக்கிய பிரமுகர்கள் ரகசியமாக பராமரிக்கப்பட்டு வந்த கணக்குகள் அடங்கிய க்ளவ்ட் சர்வர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது. இதை தவிர்த்து பல்வேறு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்ததில் சிட்பண்ட்ஸ் மற்றும் முதலீடுகள் மூலமாக ரொக்கமாக கிடைத்த வருமானத்தை குறைத்து காண்பித்து இருப்பது தெரியவந்திருக்கிறது. கணக்கில் காட்டப்படாத இந்த பணம் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதுடன் சுமார் 250 கோடி அளவுக்கு அசையா சொத்துக்களை வாங்கியிருப்பதும், கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சோதனையின்போது 12 கோடிக்கும் அதிகமான ரொக்கம் கைப்பற்றப்பட்டு இருப்பதுடன் மேல் விசாரணை நடைபெற்று வருகிறது என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியிருக்கிறது.