இன்னும் அங்கேயே இருப்பது வெட்கக்கேடானது! உடனடியாக வெளியேறுங்கள்!! – உக்ரைன் அதிபர் ஆவேசம்
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. நான்கு வாரங்களை கடந்தும் உக்ரைன் மீதான தனது தாக்குதலை ரஷியா தொடர்ந்து வருகிறது. போரில் ரஷியாவை எதிர்த்து போராடி வரும் உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.
அந்த வகையில் ரஷியாவின் தீவிர தாக்குதலை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் போர் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. மேலும் உக்ரைன் மீதான ரஷியாவின் இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடை விதித்துள்ளன.
இந்த நிலையில் பல உலக நாடுகள் ரஷியாவிடம் போரை நிறுத்த வலியுறுத்தியும் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து உக்ரைன் மீது ரஷிய படைகள் மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள் தற்போது உக்ரைன் தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களில் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன.
குறிப்பாக மரியுபோல் நகரில் ரஷ்யா மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கடுமையான உணவு பற்றாக்குறை அங்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளிடம் தொடர்ந்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று பிரான்ஸ் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ரஷியாவில் இருந்து பிரான்ஸ் நிறுவனங்கள் வெளியேற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பிரான்ஸ் நிறுவனங்கள் இன்னும் ரஷியாவில் செயல்படுவது வெட்கக்கேடானது. எனவே அந்த நிறுவனங்கள் ரஷியாவில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று கூறினார்.