பிறந்த நாளன்றே இறப்பை தழுவிய அன்பழகன் – பெரும் சோகத்தில் திமுக தொண்டர்கள்

0
63

சற்று நேரத்திற்கு முன் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ அன்பழகன் கொரோனா நோய்த் தொற்றால் காலமானார்.

இன்று 10 ஜூன் 2020ல் தன்னுடைய பிறந்த நாள் அன்றே அவர் இறந்துள்ளது திமுக தொண்டர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தளபதி போல் செயல்பட்டு வந்த ஜெ அன்பழகன் முதன்முதலாக 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதனைத் தொடர்ந்து அது வரை திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் பல சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு திமுகவின் கோட்டையாக வைத்திருந்த மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி தன்னுடைய சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட விரும்ப, திருவல்லிக்கேணி தொகுதியில் ஜெ.அன்பழகனை போட்டியிட வைத்தார். அதில் வெற்றி பெற்றவர் தொடர்ந்து 2016ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்த ஜெ அன்பழகன் அதிரடி பேச்சுக்கு பிரபலமானவர். அதிமுக மற்றும் இதர கட்சிகள் திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு தக்க பதிலடி கொடுப்பதில் வல்லவராக இருந்து வந்தார் அன்பழகன்.

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து கட்சி சார்பில் நடைபெறும் கொரோனா பாதிப்பு நலதிட்டங்களிலும், தன் சொந்த தொகுதிக்கு நல திட்டங்களிலும் தீவிரமாக பணியாற்றி வந்தார். கடந்த ஜூன் 3ம் தேதி மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி பிறந்த நாள் விழா ஏற்பாடுகளில் பங்கேற்று வந்தவர் கொரோனா அறிகுறி காரணமாக தன்னை தனிமைப் படுத்தி கொண்டார். இதனையடுத்து ரெலா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஏற்கனவே நுரையீரல் சிகிச்சை நடைபெற்றுள்ளதால் அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமானது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரழந்துள்ளார். இவரின் மறைவு திமுக தலைவர் ஸ்டாலினை கலங்க வைத்துள்ளது என கூறுகின்றனர்.

அவரது ஆத்மா சாந்தியடைய, இறைவனை பிராப்திப்போம்.