நாளுக்கு நாள் உலகம் வளர்ச்சி அடைந்து வருவதை போன்று நோய் பாதிப்புகளும் அதிகரித்து வருகிறது.வயதானவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் சர்க்கரை நோயால் அவதியடைந்து வருகின்றனர்.
இளம் தலைமுறையினர் சர்க்கரை நோய்க்கு ஆளாக முக்கிய காரணம் இனிப்பு உணவுகள் மற்றும் தவறான உணவுமுறை பழக்கம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.சுகர் இருப்பவர்கள் சர்க்கரை உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவர்கள் அறிவுரை.
இதனால் டீ,காபி மற்றும் இனிப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.சர்க்கரை மாத்திரை சாப்பிடாமல் கூட இருந்து விடுவேன்.ஆனால் இனிப்பு சாப்பிடாமல் மட்டும் இருக்க மாட்டேன் என்று சொல்பவர்கள் அதிகம்.இனிப்பு உணவுகள் மீது யாருக்கு தான் மோகம் இருக்காது.
சர்க்கரை சேர்த்துக் கொண்டால் தான் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கும்.அதற்கு மாற்று வெல்லம்,நாட்டு சர்க்கரை சாப்பிட்டால் சுகர் லெவல் எகிறாது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.டீயில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து குடிக்கும் பழக்கம் இதனால் ஏற்படுகிறது.
உண்மையில் வெல்லம் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமா என்றால் இல்லை என்பது தான் நிபுணர்கள் பதில்.சர்க்கரையோ வெல்லமோ எந்த இனிப்பு சாப்பிட்டாலும் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தான் செய்யும்.சர்க்கரையை போன்றே வெல்லத்திலும் குளுக்கோஸ் நிறைந்திருக்கிறது.
வெல்லம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் அதிகரித்துவிடும் என்பது தான் உண்மை.வெல்லம் அதிக கலோரி நிறைந்த ஒரு பொருளாகும்.வெல்லத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய்,உடல் பருமன் போன்றவை ஏற்படும்.எனவே சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.