நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது! இருப்பினும் இதை செய்தே ஆக வேண்டும்!!
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட ஒரு வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டதாக கூறி திமுகவை சேர்ந்த நபரை பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் தாக்கினர்.
பின்னர், தேர்தலில் நடைபெறும் இந்த முறைகேடுகளை தடுக்ககோரி சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து ஜெயக்குமார் மீது வழக்குபதிவு செய்து கைது செய்த போலீஸார் ஜெயக்குமாரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜெயக்குமார் மீது சாலைமறியலில் ஈடுபட்டது தொடர்பாக மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டு அதிலும் கைதானார்.
இந்த நிலையில், சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நிலத்தில் உள்ள ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்ததாக கூறி மூன்றாவது வழக்கிலும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் இருந்தும் மற்றும் ஒருவரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் இருந்தும் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
எனினும், நில அபகரிப்பு வழக்கில் அவரது ஜாமீன் மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் ஜெயக்குமார் வெளியே வர முடியாத நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில், நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கேட்டு ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து ஜெயக்குமார் ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கினார்.’
அதன்படி, திருச்சியில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் திருச்சியில் இருந்து வந்த பின் வாரந்தோறும் திங்கட்கிழமை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் எனவும் ஜெயக்குமாருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.