தொழிற்சாலையை அபகரித்த வழக்கில் ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல்!

0
156

தொழிற்சாலையை அபகரித்த வழக்கில் ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல்!

தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட வாக்குசாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட்டதாக தி.மு.க-வை சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கினர்.

அவர்கள் தாக்கியதில் காயமடைந்த தி.மு.க-வை சேர்ந்த நரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். பின்னர், ஜெயக்குமாரை அவரது இல்லத்தில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மார்ச் 7ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் மீது நில அபகரிப்பு செய்ததாக சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

சுமார் 8 கிரவுண்ட் நிலத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள எனது தொழிற்சாலையை ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் மிரட்டி அபகரித்து கொண்டதாகவும் அவரின் இந்த சட்டவிரோத செயலுக்கு அப்போது அமைச்சராக இருந்த ஜெயக்குமாருக்கும் பங்கு உண்டு என அவர் புகார் அளித்ததை தொடர்ந்து, ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா மற்றும் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் மாதம் 11-ந் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து  ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.