திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரின் மீது வழக்கு தொடுத்து அவர்கள்மீது வீண் பழியை சுமத்துவது போன்றவை வாடிக்கையாகிவிட்டது என அதிமுகவினர் குற்றம் சுமத்துகிறார்கள்.
அதற்கேற்றார்போல முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி அடுத்தடுத்து அமைச்சர்கள் மீது ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து வழக்கு தொடுத்து அதன் மூலமாக அவர்களை மிரட்டும் பணியில் இறங்கி வருகிறது ஆளும் தரப்பு.
ஆளும் கட்சியின் இந்த மிரட்டலுக்கு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமியும், தப்பவில்லை. அவரை எப்படியாவது கொடநாடு வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்று திமுக மிகக் கடுமையாக முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் மீது திமுக வழக்கு தொடுத்துள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு மேடைப் பேச்சின் போது திமுகவை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார். அவருடைய அந்த விமர்சனம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாகவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது போன்ற பிரிவுகளின் கீழ் சி.வி. சண்முகம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மீது விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜெயக்குமாரை தொடர்ந்து சி.வி. சண்முகம் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.